Showing posts with label Music. Show all posts
Showing posts with label Music. Show all posts

Saturday, November 7, 2009

சென்ற வார விடுமுறை நாட்களில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பொழுது அவரது வீட்டு டிவி பிண்ணனியில் அதிகமாய் அலறிக்கொண்டிருந்தது. அவருடன் பேச ஆரமித்ததிலிருந்து எனது முதன்மையான கவனம் பிண்ணணியில் (அவரது குரலே பின்ணணி!!!) ஓடிக்கொண்டிருக்கும் அந்த விளம்பர சத்தத்திலேயே நிலைத்திருந்தது. மற்றவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற நிலையில் ஒலியை குறைத்துக்கொள் என்று வேண்டுகோள் விடுக்க முடியவில்லை. செல்போன் என்ற சௌகரியமான சாதனத்தால் அவர் என்னை அந்த விளம்பர சத்தத்திலிருந்து விடுபட வைத்து அவர் பேச்சை முதன்மைப்படுத்தினார். விளம்பர ஒலி மெல்ல மெல்ல கறைந்து எனது கவனம் அவர் பேச்சில் செல்லவிருந்த சமயம் காதில் விழுந்த பாட்டால் மீண்டும் நண்பரின் குரல் பின்னுக்குத்தள்ளப்பட்டது.

நல்ல வேளையாய் அந்தப்படத்தைப் பற்றியும், பாட்டப்பற்றியும் பேச்சு திரும்பியதால் மீண்டும் நண்பரின் குரல் முதன்மைப்பட்டது. ஒருவேளை நண்பர் டிவியை விட்டு நகராமல் நின்றிருந்தால் பாட்டில் மனம் லயித்து, அவர் குரல் அரைகுறையாய் கவனிக்கப்பட்டிருக்கும். தப்பினார் அவர்.

அந்த பாடல், உன்னால் முடியும் தம்பியில் வரும் என்ன சமையலோ...என்ற பாடல். பாலசந்தர், கமல், படம் வந்த பழைய காலம் என்று பலதும் சிலாகித்தபின், கல்யாணி, மோகனம், வசந்தா, மத்தியமாவதி என்று ராகமாலிகையாய் வார்த்தை, காட்சி, கதை என்று கவனித்து பார்த்து பின்னி பிணைத்து இசையமைத்த இளையராஜாவை பற்றி என்ன சொல்ல என்றேன் நான். நண்பர் எனக்கு எங்கள் ஆபிஸில் வேலை செய்யும் வசந்தாமணியைத்தான் தெரியும் என்ற ரீதியில், எனக்கு கல்யாணியையும், வசந்தாவையும் சத்தியமாய் தெரியாது என்று வழக்கம் போல் முடித்துக்கொள்ள நானும் வழக்கம்போல ஏண்டா சொன்னோம் என்று நொந்து நூலானேன்.

நன்கு இசையை ரசிக்கும் என் நண்பர்களில் பலர், ஏனோ ரசிப்பை மேம்படுத்திக்கொள்ள ஆழச்செல்ல ஆர்வப்படுவதில்லை. அவர்களுக்காய் இந்தப்பதிவு (அப்பாடா, ஒரு வழியாய் பதிவுக்கான காரணத்தை கண்டுபிடித்துவிட்டேன்)

ராகமாலிகை என்பதை தாண்டி, இப்பாட்டில் "சாதம் ஆக தாமதமா" என்ற வாலியின் வரியைக் கூட ராஜா "சா தா மா கா, தா மா தா மா" என்று கல்யாணியில் ஸ்வர வரிசைப்படுத்தி பிரமாதப்படுத்தி இருப்பார். இப்பாட்டை பல முறை நீங்கள் கேட்டிருந்தாலும், ஸ்ரவம் என்பதால் ஒருவித அசௌகரியமாய், வேண்டாத, புரியாத சமாச்சாரமாய் ஒதுக்கி இருந்தால் அடுத்த முறை கேட்கும் பொழுது கவனியுங்கள். புரிந்து கேட்பதில் எவ்வளவு சுகம் இருக்கிறது என்பதும் புரியும். பாலசந்தர் மாதிரி ஆட்களுக்கு மட்டுமே இந்த மாதிரி தேவையானதை சரியாய் இளையராஜாவிடம் கேட்டுப்பெற தெரிந்திருக்கிறது என்பது அவர் படங்களை பார்த்தால் தெரியும். கற்றாரே கற்றாரே காமுறுவர்?

பாட்டில் உள்ள டெக்னிகல் சமாசரங்களை அறிய முற்படும் காலங்களில், அதை முழுமையாய் ரசிக்க இயலாமல் போவது தவிர்க்க இயலாதது. இதை தவிர்க்க பலமுறை கேட்க முற்படலாம். அறிந்து கொள்ள, கொள்ள நன்றாய் ரசிக்கலாம் என்பதை தவிர, நல்ல இசை, கேட்ட இசை என்ற பாகுபடுத்துதல் எல்லாம் தேவையில்லாதது. Simple definition ஆய் மனதை கிளரும் (நவரசத்தில் எது வேண்டுமானாலும் இருக்கலாம்) இசையே நல்ல இசை என்பதாய் என்பதாய் எனது எண்ணம். ரசனையும், இசையும் கால நேரங்களுக்கு உட்பட்டது. என் அப்பா, ரேடியொவில் ரசித்த பல பாடல்களை ரசிக்க விடாமல், ரேடியொவின் கழுத்தை அன்னாட்களில் நெறித்த நான் தற்பொழுது அதில் ரசிக்க பல விஷயங்கள் இருப்பதை உணருகிறேன். என் நண்பர், காதல் தோல்வியில் இருந்த பொழுது உருகி உருகி ரசித்த ரோஜா பட "காதல் ரோஜாவே" பாட்டை அவரால் Ipod சகிதம் பிசினஸிற்காய் ஊரூராய் சுற்றும் பொழுது ரசிக்க இயலவில்லை. கேட்டால் அது எல்லாம் ஒரு காலம்டா என்பார்.

ராகம், ஸ்வரம், ஸ்ருதி போன்ற இசையின் அடிப்படை வார்த்தைகளுக்கு கூட அர்த்தம் தெரியாமல் அபாரமாய் எல்லா இசையும் ரசிக்கும் என் நண்பர்களை குழப்புவதற்காய் என்னால் ஆன முயற்சி கீழே.

ஸ்ருதி - ஆதார சப்தம். இதன் அடிப்படையாய் பிற சப்தங்கள் ஒரு வறைமுறைக்குட்பட்டு எழுப்பப்பட அது இசையாகிறது. Commonly refers musical pitch. determined by auditory perception
ஸ்வரம் - ஒரு இசையின், சப்ததின் ஒரு சிறிய பகுதி. Type of musical sound for a single நோட்
ராகம் - ஒரு சட்டத்திற்கு உட்பட்ட, ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட சத்தம்.
தாளம் - குறிப்பிட்ட கால இடைவேளையில் ஓரே சீராய் தட்டி எழுப்பப்படும் ஓசை என்பதாய் கொள்ளலாம்
ராகமாலிகை - பல ராகங்களின் சேர்க்கை
பல்லவி - பாடலின் முதன்மையான வரிகள்
அனுபல்லவி - பல்லவிக்கு அடுத்து வருவது
சரணம் - பாடலின் கருத்துப்பகுதி

இசையை புரிந்து ரசிக்க முயற்ச்சிகிறேன் என்பதை தாண்டி "சாமி சத்தியமாய்" எனக்கு எதுவும் தெரியாதுங்கோ...நல்லா தெரிஞ்சவங்க ஏதாவது எதாவது குத்தம் குறை இருந்தா சரியாய் சொல்லிக்கொடுத்து, மனிச்சு விட்டுடுங்கோ சாமியோவ்.....

Saturday, August 15, 2009

சென்ற பதிவின் தொடர்ச்சியாய் இது. மைக்கேல் ஜாக்சனின் கடைசி நிகழ்ச்சியின் உரிமையின் ஏல போட்டியில் Sony 60 மில்லியன் டாலர் கொடுத்து வென்றுவிட்டது. Oct 30ல் உலகெங்கும் திரையரங்குகளில் ரசிகர்கள் கண்டு களிக்கலாம். நிறைய பேட்டிகளுடன் நிகழ்ச்சியின் பெரும் பகுதியை 3D ல் வேறு திரையிட Sony திட்டமிட்டு இருக்கிறது.

கடைசி தகவல்படி அவரது உடல் மெய்யாகவே புதைக்கப்பட்டுவிட்டதாம். புதைக்கப்படுவதற்க்கு முன், அவரது மூளையைகழட்டி எடுத்து பரிசோதித்து மீண்டும் உடலில் பொருத்தினார்களாம்...அதை பற்றியெல்லாம் நமக்கு என்ன சார் தெரியும்? மூளை சமாசாரமாச்சே!!!

Saturday, July 25, 2009

செத்தும் கொடுத்தான் சீதக்காதி. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இவருக்கு சரியாய் பொருந்தும். இறப்பதற்கு முன் இவர் செய்த ஒத்திகை நிகழ்சியின் வீடியோவை சோனி கம்பெனி 50 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் இருந்து ஏலம் விட்டிருக்கிறது. Paramount, Universal, 20thCentury, Warner Bros என்று பல பெரிய தலைகள் வியாபார அடிதடியில் இறங்கியிருக்கின்றன. பேரம் படிந்தபின் பெரிய திரைகளில் மக்கள் பார்த்து 'ஜென்ம சாபல்யம்' அடையலாம். இதை தவிர இவர் இறந்ததனால் ஏற்பட்ட CD, படங்கள் விற்பனை, ராயல்டி தொகைகள் போன்றவை இவரை கடனை அடைத்தாலும் கையில் நிறைய காசுடன் இருக்கும் (இருந்த) கோடீஸ்வரனாக்கி இருக்கிறது.

இறந்தபின் ஏறத்தாழ ஒரு மாத காலம் பிணத்தை வைத்துக் கொண்டு இவர்கள் அடித்த கூத்து கொஞ்ச நஞ்சமல்ல. இருக்கும், கிடைக்கும் சொத்திற்கான அடிதடி ஒரு புறம் தொடர, இறந்த தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே amezon.com லிருந்து அமெரிக்காவின் சந்து பொந்து கடை வரை எல்லாவற்றையும் ஜாக்சன் மயமாக்கி காசு பார்த்துவிட்டார்கள். பனியன், ஜட்டி, துண்டிலிருந்து குழந்தைகள் விளையாடும் பந்து வரை எல்லாம் ஒரே ஜாக்சன் மயம்தான். டிவிக்களையும், பத்திரிக்கைகளையும் பற்றிஎதுவும் சொல்லுவதிற்க்கு இல்லை. நம்மூர் ஆனந்தவிகடனிலிருந்து அமிஞ்க்கரை போஸ்ட் வரை ஜாக்சன் பற்றிய பல செய்திகளை போட்டு அவரை மகாத்மா ரேஞ்சிற்க்கு உயர்த்தியபின் இவர்கள் என்ன விட்டு விடுவார்களா?

Professionalism என்ற வார்த்தையை சொல்லி எதையும் நேர்த்தியாய் வியாபாரமாக்குவதில் அமெரிக்கர்கள் எப்பொழுதும் 'கை' தேர்ந்தவர்கள். இன்று தகனம், அன்று அடக்கம் என்று புலி வருது, புலி வருது கதையாய் இழுத்து கடைசியில் டிக்கெட் போட்டு ஒரு showவுக்கு ஏற்பாடு பண்ணி ஒரு வழியாய் வியாபாரத்தை முடித்தார்கள் என்று பார்த்தால், Jackson rehearsal footage என்று அடுத்த வியாபாரத்தை ஜம்மென்று தொடங்கிவிட்டார்கள். "பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்" என்பதன் பொருளை நன்றாய் அறிந்தவர்கள்.


நியூயார்க் Times square ல் பெரிய திரையில் சவ அடக்க நிகழ்ச்சியை காண தெருவில் இடம் பிடிக்க மடக்கு நாற்காலிகளுடனும், கையில் துண்டுடனும், வெயில் காலம் வேறு ஆரமித்து விட்டதால் பாலின வித்தியாசமின்றி ஜட்டி, பனியனுடன் அலைந்த கூட்டத்தை பார்த்த பொழுது நிஜமாகவே இவர்கள் எல்லோரும் ஜாக்சன் இசையில் மயங்கியவர்கள்தானா? என்ற கேள்வி எழுந்ததை தவிர்க்க முடியவில்லை.

தொக்கி நிற்க்கும் இந்த சில கேள்விகள் இன்னும் சில நாட்கள் பத்திரிக்கைகளின் பக்கத்தையும், பையையும் நிரப்ப உதவும். எப்படி இறந்தார்? ஜாக்சன் வைத்திருந்த குழந்தைகளின் தந்தை யார்? (ஜாக்சனின் குழந்தைகளுக்கு தந்தை யார் என்பது அபத்தமான கேள்வி) ஜாக்சனின் உடல் உண்மையாகவே அடக்கம் செய்யப்பட்டுவிட்டதா?

நமக்கு அவரது இசையை முழுமையாய் கேட்க்கும் பாக்கியம் இன்னும் கிட்டவில்லையாதலால் இப்போதைக்கு அவரது இசை பற்றிய மேதாவிலாசங்களை சொல்லாமல் விட்டுவிடுவோம். இறந்த மனிதனின் வாழ்க்கையை பற்றி விமர்சிப்பது நாகரீக குறைபாடதலால் அதுவும் எழுதாமல் விடப்படுகிறது இங்கு.


Saturday, May 23, 2009

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஒரு வழியாய், முடிவுக்கு வந்துவிட்டது என்று பார்த்தால், இழுக்க இழுக்க இன்பம் என்று நினைத்து விட்டார்கள். ப்ரி-பைனல், போஸ்ட்-பைனல் என்று 2009 முடிவுக்கு வந்து விடும் போலிருக்கிறது. sponsers நிறைய கிடைக்க பாட்டை விட பைத்தியகாரத்தனங்கள் அதிகரித்துவிட்டது.

சென்னையிலிருந்து வரும் பொழுது, Brussels Airport ல் கர்நாடக இசை பாடகர் T M கிருஷ்ணாவுடன் சில நிமிடம் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. என் பக்கத்தில் அவர் நின்றிந்தாலும், என்னால் சட்டென்று அடையாளம் காண முடியவில்லை. கச்சேரியில் இருப்பதற்கு நேர் மாறாய், ஜீன்ஸ், கோட், Laptop சகிதம், படு Casual ஆய் Advertising Model போல் ஜம் என்று இருந்தார். நல்ல திறமைசாலி. குறிப்பாய் ராக ஆலாபனைகளில் அவரது திறமையை பல கச்சேரிகளில் கேட்டிருக்கிறேன். திறமையை விட புத்திசாலிதனமும், Self Marketing Skills தான் ஒருவனை முன்னே கொண்டு செல்லுகிறது. நம்மை நாம் எவ்வாறு Marketing பண்ணிக்கொள்கிறோம் என்பதில் இருக்கிறது சூட்சுமம். நாம் நம்மை பற்றி நன்றாய் சொல்ல, பின் நம்மை, இவன் நல்லவன், வல்லவன் என்று பிறர் தொடருவார்கள். இதில் இளைய தலைமுறை கர்நாடக இசை கலைஞர்கள் பெரும்பாலோர் சமர்த்தர்கள். நடை, உடை பாவனையில் இருந்து வேண்டிய பொழுது Top to Bottom எல்லா வகையிலும் சுய விளம்பரம் சார்ந்து, காரியங்களை தங்களை மையப்படுத்திக்கொள்வதில் முடித்துக் கொள்ள அவர்களால் சுலபமாய் முடிகிறது.

ஏர்டெல்கு வருவோம். அதில் பாடும் பிரசன்னாவிற்க்கு, அவரது பாடும் திறமை போல் பல மடங்கு தன்னை விளம்பரபடுத்திக் கொள்ளும் திறமை இருக்கிறது. சரக்கு கம்மி என்னும் விஷயம் கிடைக்கும் விளம்பரத்தில் அடிபட்டு போகும். அமைதியாய், அடக்கமாய் கஷ்டமான பாட்டை எடுத்து, நெளிவு, சுளிவான சங்கதிகளை பிரமாதமாய் போட்டு, அபாரமாய் பாடும் ரவியின் திறமையை நாலு பேர் மட்டுமே அறிவர்.

இரண்டு விஷயங்களை எழுத நினைத்து எழுதுகிறேன். முதலாவது, நண்பர்கள் சிலர் அமர்த்தா TV Links (Provided few links below) சிலவற்றை அனுப்பி பட்டையை கிளப்பும் பொடுசுகள் முன்னால் AirTel Super Singer ல் பாடுபவர்கள் எம்மாத்திரம் என்றிருந்தார்கள். இரண்டாவது, நெட்டில் பார்த்த, படித்த பலதிலும், பலர் AirTel Super Singer இல் பங்கு பெறும் பலர் பேசும் பிராமண பேச்சை கீழ்தரமாய் சாடியிருப்பது. தங்கள் பிழைப்பிற்க்காய் திராவிக கட்சிகள் செய்த பல வேலைகளில் பல நல்ல விஷயங்கள் ஏறி மிதிக்கப்பட்டு அவை ஒரு குறிப்பிட்ட கும்பல் சார்ந்த ஆளுமைக்கு உட்பட்டுவிட்டது. கேரளாவில், இசை என்பது பொதுச்சொத்து.

நம் வீட்டில் திறமையை வளர்த்த வழியில்லை. எல்லா அடுத்தவர்களையும், ஆஹா, ஓஹோ என்று கூப்பிட்டு வளர்த்துவீர்கள். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று மேடைதோறும் மார் தட்டுவீர்கள். அவர்கள் திறமையால் அவர்கள் வளர்ந்தபின், ரஜினி கன்னடம், SPB தெலுங்கன், ஜேசுதாஸ் கேரளாக்காரன் என்று கண் முன்னே நிற்கும் இளையராஜாவை விட்டு விட்டு புறம் சொல்லி தூற்றுவீர்கள். ஸட்ஜம், பஞ்சமம் இல்லாமல் ஏதையா சங்கீதம்? வடமொழி பெயர்கள் பிடிக்கவில்லை என்றால், குரல் (ச), துத்தம் (ரி), கைக்கிளை (க), உழை (ம), இளி (ப), விரளி (த), தாரம் (நி) என்று தமிழில் பெயர் சொல்லி இசை வளருங்கள். பிறகு பாருங்கள், உங்கள் வீட்டு குயில்களும் எப்படி பாடும் என்பதை.

Few suprising sampls are below...Watch this videos... more posted in YouTube
http://www.youtube.com/watch?v=VES73uNzWJE&feature=PlayList&p=92DFD3CD746EDAB7&playnext=1&playnext_from=PL&index=6
http://www.youtube.com/watch?v=V0YXE1BAXDo&feature=channel
http://www.youtube.com/watch?v=VrulmmMdajQ&feature=channel
http://www.youtube.com/watch?v=lQdk0CK9vW4&feature=channel
http://www.youtube.com/watch?v=4MKvY0Q8NaE
http://www.youtube.com/watch?v=VrulmmMdajQ&NR=1
http://www.youtube.com/watch?v=iX0U9PFRJ8Y&feature=related
http://www.youtube.com/watch?v=VES73uNzWJE&feature=PlayList&p=92DFD3CD746EDAB7&playnext=1&playnext_from=PL&index=6
http://www.youtube.com/watch?v=V0YXE1BAXDo&feature=channel
http://www.youtube.com/watch?v=VrulmmMdajQ&feature=channel
http://www.youtube.com/watch?v=lQdk0CK9vW4&feature=channel
http://www.youtube.com/watch?v=4MKvY0Q8NaE
http://www.youtube.com/watch?v=VrulmmMdajQ&NR=1
http://www.youtube.com/watch?v=iX0U9PFRJ8Y&feature=related