ஒரு 7-8 மாதங்களுக்கு முன்பு என் மனைவி என்னிடம் அவளது அலுவலக இதழுக்காக எதாவது எழுதித்தரும்படி கேட்டாள். ஒன்றும் தெரியாது, என்ன எழுதுவது என்று வினவி கவிதை எழுத வற்புறுத்தப்பட்டேன். தமிழ் எழுத படிக்க தெரிந்த தகுதி ஒன்றை வைத்து ஏதோ தப்பாய் நினைத்து விட்டாள். எழுத்து, வார்த்தை, அருவி மாதிரி கொட்டணும் என்று குணா கமல் மாதிரி அவளிடம் மன்றாடி முடியாமல், எழுத உட்கார்ந்தேன். மனைவியாயிற்றே!!! யார் யார் எல்லாமோ கவிஞர் என்று சொல்லி திரிகிறார்கள் என்ற எனது ஆதங்கம், எனது தன்னம்பிக்கையை அதிகப்படுத்தியது. "டாலர் கனவுகள்" என்று தலைப்பிட்டு நான் கிறுக்கிய கிறுக்கல்கள் உங்கள் பார்வைக்கு இங்கே.
இதில் நான் எதிர் பாராத ஒரு விஷயம் என்னவென்றால், எனது கிறுக்கல்கள் அச்சுக்கு தேர்வாகி ரூ.250/- பரிசு வேறு.(ஆலையிலா ஊருக்கு இலுப்பைபூ சக்கரை?) எனது எழுத்தும் அச்சில் ஏறி விட்டதால், தமிழ் இனி மெல்ல சாகாது. நின்று நிலைத்து உயிர் வாழும்!!!.
எழுதி முடித்து நண்பர் ராம்குமாரிடம் பகிர்ந்து கொண்ட பொழுது நன்றாய் இருப்பதாய் சொன்னார் (இங்கிதம் தெரிந்த பெருந்தன்மையான நல்ல நண்பர் அவர். வேறு வழியில்லை அவருக்கு) 16ல் "மனையாள் சுகம் துறந்திட்டோம்" என்று எழுதி இருந்தேன். தவறாய் அச்சாகி இருக்கிறது. சூழ் நிலை கைதியாய், முடிவு எடுக்க த்ராணியற்று சுழன்று கொண்டிருப்பவர்கள் ஏதாவது கவிதை என்று இப்படி கிறுக்குவார்கள், புறம் தள்ளுங்கள்.