Monday, February 17, 2014

பிப்ரவரி 13 உலக வானொலி தினமாம். 90க்கு முன் விவரம் தெரிந்த எவரும் வானொலின் தாக்கத்திலிருந்து தப்பி இருக்க முடியாது. வானொலி என் வாழ்வின் ஒரு பகுதி அன்னாளில்.

காலை 5.55க்கு வந்தேமாதரம் துவங்கி 9.15 மணிக்கு காலை நிகழ்ச்சிகள் கோவை வானொலியில் முடியும் வரை தினசரி ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கும் எங்கள் வீட்டு வால்வு வானொலி. இடை இடையே திருச்சி, சென்னை, பாண்டிச்சேரி, சிலொன் என்று ஒரு சுற்று மினி டூர் சுற்றி வருவோம். ரேடியோ பக்கத்திலேயே 'வானொலி' புத்தகம் இருக்கும். மாதமிருமுறை தவறாது வாங்கி விடுவார் என் அருமை அப்பா. கடைசியாய் நான் பார்த்த இதழ் 75பைசா என்று நினைவு.

 
80களில் radio license புத்தகத்தை எடுத்துச் சென்று ஒரு முறை Annual license fee கூட கட்டியிருக்கிறேன். சிங்க முத்திரை ஸ்டாம்பை ஒட்டி ஒரு முத்திரை அடித்துத் தருவார்கள். வீட்டில் அந்த புத்தகம் இருக்கிறதா என்று தெரியவில்லை. கிடைத்தால் பொக்கிஷமே. ராகம் தேஷ் என்று தெரியாமல் வந்தேமாதரம் மனதில் பதிந்தது ரேடியோவால்தான். தினசரி நிகழ்ச்சி நிரல் பசுமரத்தாணியாய் பதிந்து கிடக்கிறது.

கோவை வானொலின் காலை 5.55 வந்தேமாதரம், டெல்லி ஆங்கில செய்திகள், பக்திப்பாடல்கள், 6.30 கோவையின் தினசரி நிகழ்ச்சிகள், 6.45 மாநிலச் செய்திகள், விவசாய செய்திகள், 7.15 ஆகாஷ் வாணி டெல்லிஅஞ்சல், 7.30 to 8.00 கர்நாடக இசை. திருச்சியில் அதே சமயம் 7.30 to 8 மணி திரை இசை. கர்நாடக சங்கீதம் கோவையில் ஆரமித்தவுடன் எங்கிருந்தாலும் ஒடி வந்து திருச்சி திரை இசைக்கு மாற்ற என் அப்பா, என்டா நன்றாய் பாடிக்கொண்டிருக்கும் வித்வானின் கழுத்தை நெறிக்கிறாய் என்பார்.

பின்னாளில் கர்நாடக இசை பிடித்துப்போக பிடித்ததை எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பிடிவாதத்தால் வயிற்றையும் வாயையும் பற்றி கவலைப்படாமல் மியுசிக் காலேஜில் சேர்ந்ததும் கவலைப்பட்டு விட்டதும் தனிக்கதை.

காலை 8 லிருந்து 8.20 வரை ஹிந்தி செய்தியும் ஆங்கில செய்தியும் டெல்லி அஞ்சலாய். 8.21 லிருந்து 9 மணி வரை திரையிசை கோவை வானொலியில். பின்னாளில் திரையிசை 9.15 வரை நீடிப்பு செய்யப்பட்டது. இப்பொழுதும் இதே நிகழ்ச்சி நிரலா என்று தெரியவில்லை. திரையிசைக்காய் ஸ்டேஷ்சன் ஸ்டேஷனாய் ரேடியொவை திருகியதை நினைத்தால் தேடல் எவ்வளவு சுகம் என்பது புரிகிறது.

NCC Camp கிற்காய் அரைப்பரீச்சை லீவில் அதிசயமாய் 5 மணிக்கு எழுந்திருந்த வேளையில் காலை 5.15க்கு இந்திய இலங்கை அமைதிப்படைக்காக (IPKF) ஒலிபரப்பாகும் செய்தியில் MGR இறந்த செய்தியை அப்பா கேட்டுச் சொன்னது ரேடியோவில் தான். 5.30க்கு பள்ளியில் சொன்ன பொழுது நம்பாமல் ஆறு மணி ஆங்கில செய்தியை Head Post Office அருகில் இருக்கும் டீக்கடையில் கேட்டுவிட்டு வந்தார் NCC வாத்தியார் தமிழ்வாணன். நொடிப் பொழுதில் அமெரிக்காவிற்கும், ஆப்பிரிக்காவிற்கும் செய்தி பறிமாறும் காலகட்டத்தில் 20-25 வருட பின்னோட்டம் வேடிக்கையாய் இனிக்கிறது.

விளம்பரம் இல்லை வியாபாரம் இல்லை. Dec-11 பாரதியின் பிறந்த நாளில் நல்ல பாட்டுக்களை கேட்டோம். இன்று Dec-11 பாரதியை தொலைத்து Dec-12ல் ரஜினியின் பிறந்த நாள் கூத்துக்களை பார்க்கிறோம். இடையூறுயில்லா, இடையறா சுகத்திற்க்காய் நொடிக்கொரு மாறுதலுடன் ஓடிக்கொண்டிருக்கும் கால வெள்ளத்தில் 'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவில கால வகையினானே' என்ற நன்னூல் புறனடையே மாறாதிருக்கும்.

அது சரி.. Feb-13 பேசியாகிவிட்டது....Feb-14..அதைப்பற்றி எழுத என்ன இருக்கிறது...தினம் தினம் காதலிப்பவர்க்கு தனியொரு தினம் எதற்கு? சட்டென ஞாபகம் வருவது கோவையில் நடந்த கலவரம்...காவலர் செல்வராஜ் என்பவர் கொல்லப்பட்டதால் (பெயர் சரிதான்..என் ஞாபக சக்தி சரியாய் இருந்தால்)...பின்.பின்...வாழ்வில் வாங்கிய முதல் முத்தம் (அம்மா தான்)... நான் 'வழங்கிய' என்று எழுதவில்லையே...அப்பாடா...தப்பித்தேன்...

Friday, February 7, 2014

தனிமை.... ஊரையும் உறவையும் விட்டு ஓடி வந்துவிட்டாலும் அயர்ச்சியும் ஆயாசமுமாய் ஒதுங்கி நிற்கும் போதுதான் தனிமையின் சுமை அதிகமாய் உணரப்படுகிறது. உள்ளுரிலேயே உறவுகளுடன் இருந்தபோதிலும் 90களில் தனிமையின் சுமையால் பொதிமாடாய் ஊரெங்கும் சுற்றித்திரிந்து இருக்கிறேன். தனிமையை விரட்டுவதாய் நினைத்து சைக்கிளை விரட்டியதே அதிகம்.

தனிமை எப்பொழுதுமே சுகமான சுமைதான். ஒடிக்கொண்டிருக்கும் ஒட்டத்தைப்பற்றியும் தூரத்துப் புள்ளியாய் தெரியும் கனவுகளைப்பற்றியும் கவலைப்படாமல் களித்திருப்பது தனிமையில்தான். கண்ட கனவுகள் கானல் நீராய் போனதும், காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி களித்த நாட்கள் கணப்பொழுதில் மறைந்து போனதும், ஓட்டி உறவாடிய நண்பர்களும் உறவுகளும் உதிர்ந்து போனதும் நினைவில் வர கழிவிரக்கமே மிஞ்சும் தனிமையில்.

தனிமை சூழும்பொழுதெல்லாம் எட்டி எட்டி உதைத்து உற்சாகமாய் வெளிவரவே நான் முயல்கிறேன். பல சமயம் மெல்ல அசை போட்டுப் பார்க்க பழைய நினைவு சுகம் சுழலாய் உள்ளே இழுத்துவிடுகிறது. நினைவுச்சுகம் ஒரு லாகிரி வஸ்து.
என்னை அது விரட்ட,  நான் அதை விரட்ட முயல்கிறேன் இந்த Blog post மூலமாய்...ஜெயிப்பது எப்பொழுதுமே தனிமைதான்

Saturday, May 4, 2013

ஒரிரு மாதங்களுக்கு முன் துக்ளக்கில் வேளங்குடி கிருஷ்ணனின் ஸ்ரீமத் பாகவதம் படிக்க நேர்ந்தது. பாகவதத்தில் சொல்லியுள்ள காலக்கணக்குகளை விளக்கியிருந்தார். படிக்க படிக்க வியப்பாய் இருந்தது. நமக்கு விளங்காத அல்லது விருப்பமில்லாத விஷயங்களை பெரியார், பகுத்தறிவு ஏதாவது ஒரு அடைப்புக்குறிக்குள் அடைத்து அமுக்கி விடுவதே நமது வாடிக்கை. இதில் கொடிமையிலும் கொடுமை அபத்தமான, துளியும் உண்மையும், logicம் இல்லாத விஷயங்கள் Internet லும், News paper, Magazines ல் வந்தாலோ, அல்லது நம்மூர் அறிவு ஜீவிகள் யாராவது பேசி விட்டாலோ கண்முடித்தனமாக நம்புவது. குறிப்பாய் ஆங்கிலத்தில் அயல் நாட்டான் சொல்லிவிட்டால் அந்த கருத்திற்கு எதிராய் பேசுபவன், யோசிப்பவன் ஒரு முழு மூடன்.

நானும் கண்முடித்தனமான நம்பிக்கை எந்த விஷயத்திலும் கொண்டவனில்லை. முடிந்தவரை புரியாத விஷயங்களை மட்டம் தட்டாமல், புரிந்து கொள்ள முடியுமா என்று பார்க்கிறேன். சரியான விளக்கம் ஒருவரிடம் கிடைக்கவில்லை என்றால் சரி இவரும் நம்ம கேஸ் தான் என்று நகர முயல்வேன். ஊர் பெயர்கள் போன்று வார்த்தைகளும், கருத்துக்களும் திரிந்துதான் தலைமுறை கடக்கிறது. ஆற்றில் ஓடும் குழாங்கல்லாய் சொல்லும், மொழியும், கருத்தும் புதிது புதிதாய் ஒவ்வொரு நொடியும் ஜனித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த உண்மையை உணர தலைபடும் பொழுது, காலம்தான் கடவுள், இந்த பிரபஞ்சத்தில் நான் யார் என்பதான தத்துவ விசாரணையே மிச்சமாகிறது.

Second, Hour என்பதை தாண்டி எதுவும் தற்காலத்தில் இருப்பதாய் தெரியவில்லை. Second யை வேண்டுமானல் millisecond, microsecond என்று பிரிக்கலாம். அப்படியே இவ்வளவு விரிவான காலக்கணக்கு இருந்தாலும், அது ஏற்படுத்தப்பட்ட காலமும், நம்முடைய காலக்கணக்குக்கும் இடையே ஆன காலக்கணக்கை என்னவென்பது? நல்ல விஷயம் என்பதாய் நினைப்பதை உடனே பகிர்தல் நலமாதலால் வேளங்குடி கிருஷ்ணனின் எழுத்துக்கள் அப்படியே கீழே...

சில வருடங்களுக்கு முன் படித்த யுகக் கணக்கின் postம் உங்கள் பார்வைக்கு...

http://www.harish-sai.blogspot.in/search/label/Religion%20%2F%20God

"......

2 பரமாணுக்கள் = ஒரு அணு
3 அணுக்கள் = ஒரு த்ரிஷரேணு
3 த்ரிஷரேணு = ஒரு த்ருடி
100 த்ருடிகள் = ஒரு வேதம்
3 வேதங்கள் = ஒரு லவம்
3 லவம் = ஒரு நிமிஷம்
4 நிமிஷம் = ஒரு க்ஷணம்
5 க்ஷணங்கள் = ஒரு காஷ்டா
15 காஷ்டா = ஒரு லகு
15 லகு = ஒரு நாழிகை
2 நாழிகை = ஒரு முக்ஷீர்த்தம்
30 முக்ஷீர்த்தம் = ஒரு நாள்
60 நாழிகை = ஒரு நாள்
இரண்டரை நாழிகை = ஒரு மணி
24 நிமிஷம் = ஒரு நாழிகை
48 நிமிஷம் = ஒரு முக்ஷீர்த்தம்
60 நிமிஷம் = ஒரு மணி
24 மணி = ஒரு நாள்

நம்முடைய ஒரு நாள் 24 மணி நேரங்கள் கொண்டது. அதில் 60 நிமிஷங்கள் ஒரு மணி நேரம். புராணத்தின்படி ஒரு 48 நிமிஷம், ஒரு முக்ஷீர்த்தமாய் சொல்லப்படுகிறது. அதே 24 நிமிஷங்கள் ஒரு நாழிகை. ஒரு நாளில் 60 நாழிகை இருக்கும். ஒரு மணி நேரம் என்பது இரண்டரை நாழிகைகள். முப்பது முக்ஷீர்த்தம் ஒரு நாள். இரண்டு நாழிகை ஒரு முஷீர்த்தம். 15 லகு ஒரு நாழிகை. 15 காஷ்டா ஒரு லகு. 5 க்ஷணங்கள் ஒரு காஷ்டா. நான்கு நிமிஷங்கள் ஒரு க்ஷணம். மூன்று லவம் ஒரு நிமிஷம். (இந்த நிமிஷம் நாம் ஆங்கிலத்தில் கூறும் மினிட் அல்ல) மூன்று வேதங்கள் ஒரு லவம். 100 த்ருடிகள் ஒரு வேதம். மூன்று த்ரிஷரேணுகள் ஒரு த்ருடி. மூன்று அணுக்கள் ஒரு த்ரிஷரெணு. 2 பரமாணுக்கள் ஒரு அணு. காலத்தின் மிகச்சிறிய அளவே பரமாணு என்று சொல்லப்படுகிறது.

ஒரு கணக்கிற்காக கூறுகிறேன். ஒரு நாழிகை 24 நிமிடங்கள் என்று எழுதியிருந்தேன். மேற் சொன்ன அட்டவணையின்படி வகுத்துக் கொண்டே போனால், ஒரு பரமாணு = 0.000000333 நிமிடங்கள் (மினிட்ஸ்) அல்லது ஒரு பரமாணு = 0.00002 வினாடிகள் (செகண்ட்ஸ்). இந்த அளவுக்குத் துல்லியமாக ரிஷிகள் கணித்துக் கூறியுள்ளார்கள். பதினைந்து நாட்கள் சேர்ந்தது ஒரு பக்ஷம். அது வளர்பிறை, தேய்பிறை என்று இரண்டாக உள்ளன. இரண்டு பக்ஷங்கள் சேர்ந்ததால், ஒரு மாதம். இரண்டு மாதங்கள் ஒரு ருதுவாகச் சொல்லப்படுகிறது. அதாவது சித்திரை, வைகாசி வசந்த ருதுவென்றும், ஆனி, ஆடி க்ரிஷ்ம ருதுவென்றும், ஆவணி, புரட்டாசி வர்ஷ ருதுவென்றும், ஐப்பசி கார்த்திகை சரத ருதுவென்றும், மார்கழி, தை க்ஷேமந்த ருதுவென்றும், மாசி, பங்குனி சிசிர ருதுவென்றும் சொல்லப்படுகிறது.

ஆறு ருதுக்கள் சேர்ந்தால், ஒர் ஆண்டு அல்லது ஒரு வருஷம் என்று சொல்லப்படுகிறது. இந்த வருடமே ஸம்வத்ஸரம், பரிவத்ஸரம், இடாவத்ஸரம், அணுவத்ஸரம், வத்ஸரம் என்று ஐந்து வகைப்படுகின்றது. இவை சூரியன், ப்ருஹஸ்பதி, நாள், சந்திரன், 27 நக்ஷ்த்திரங்கள் ஆகியவற்றை குறித்து மாறுபடுகின்றன................ ."

......

மே மாத சென்னை வெயில். இரவிலும் வெப்பம் குறைந்தபாடில்லை. துக்ளக்கை பார்த்து படித்து தமிழில் type செய்ததில் வியர்த்து ஓழுகுகிறது. ஜன்னலை திறந்து விட்டேன். காற்று உடம்பில் பட சுகமான சுகம். Vicks மிட்டாயை வாயில் பொட்டு வாயை திறந்து காற்றை இழுக்க தொண்டையில் ஏற்படும் ஜில்லிப்பு போன்ற ஒரு சிலிர்ப்பு. ஜனனல் வழி தெரியும் வானத்தில் நட்சத்திரங்கள் மினுமினுகின்றன. பல ஒளியாண்டை கடந்து வந்த ஒளி. ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு சூரியன் என்று பள்ளி காலத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு பூமி என்ற கணக்கில் இருக்குமானல்...? உயிரிகள் இல்லாமலும், உயிரின, தாவரங்களுடனும், அம்மண மனிதர்கள் முதல் advance மனிதர்கள் வரை எல்லா யுகமும் வியாப்பித்து, காலத்தால் சூழப்பட்டு இந்த பிரபஞ்சம் வேவ்வெறு யுகமான பூமிகாளால் நிறைந்து கிடக்கிறது. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. எல்லாம் புரிந்து பேசாமல் இருக்க ஞானியாகாவோ அல்லது எதுவும் புரியாமல் அதிகம் பேசும் பகுத்தறிவாளனாகவோ நான் இல்லை. எதுவும் தெரியாத ரெண்டும் கெட்டான். ஒன்று மட்டும் தெரிகிறது திருவள்ளுவர் தயவால்...

" பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் "
Tuesday, February 5, 2013

எழுதி நிறைய நாட்களாகிவிட்டது. பகிர, எழுத நினைத்த பல விஷயங்கள் மறதியால் முழ்கடிக்கப்பட்டுவிட்டன. தமிழனுக்கு சினிமாதானே எல்லாம்..அதில் இருந்து ஆரமிக்கலாம் மீண்டும்...

விஸ்வரூபம்....அடாவடிதனத்தின் விஸ்வரூபம், அரசின் கண்மூடித்தனமான அடக்குமுறையின் விஸ்வரூபம்..தன் படத்திற்கு இவ்வளவு பெரிய விளம்பரம் கிடைக்கும் என்று கமல் தன் பகுத்தறிவால்(!!!) பகுத்து அறிந்து இருக்கமாட்டார். படம் intervalக்கு அப்புறம்தான் படா தமாஷா, ஷோக்கா கீது என்பது போல, கமல் தன் சொத்து எல்லாம் போயே போய் விட்டது என்ற என்ற அழுகைக்கு அப்புறம்தான் குட்டிக்கரணம், கோமாளித்தனம், அம்மாதான் எல்லாம் மற்றதெல்லாம் சும்மா என்று சுவாரசியமான சீன் போட்டு ஒருவழியாய் படத்தை வெளிவர தேதி சொல்லிவிட்டார்.

இனிமேல் எல்லா மூஸ்லிமும் நல்லவர்கள், இந்து, கிருஸ்துவர்களும் நல்லவர்கள்...எந்த நாட்டிலும் குண்டே வெடிக்ககல, யாருமே சாகல..என்று நல்ல படமா எடுங்கள். எடுத்து முடித்தபின், எதற்கும் பள்ளர், பறையர், செட்டி, அய்யர், வன்னியர், முகமதியர், கிருஸ்துவர், நாடார், நரிக்குறவர், கவுடர், கவுண்டர், படுகர், பிள்ளை, வேளாளர், வெட்டியான்...முடியலடா சாமி....எல்லாருக்கும் போட்டு காண்பித்து NOC வாங்கிட்டு அப்புறம் சென்சார்க்கு போங்க..இல்லாட்டி படத்தை government தடை பண்ணிடும் ஆமா...

இதை எழுதும் நேரத்தில் படித்தது...சிங்கம்2 படத்தை தடை பண்ணணும்..மூஸ்லிம்கள் கடல் கொள்ளயர்களாய் வராங்களாம்..கடல் பட director, producer ரை அரஸ்ட் பண்ணணுமாம்..கிருஸ்துவை பத்தி ஏதோ சொல்லி இருக்காங்களாம்....ஆதிபகவன் படத்தை எடுத்து முடித்தவுடன் இந்து மக்கள் கட்சி ஆட்களுக்கு போட்டு காண்பிக்க வேண்டுமாம்...

Saturday, August 6, 2011


List படித்ததும் தலை கிறு கிறுத்துவிட்டது. 20 வருடமாய் உழைத்து ஒரு பதினைந்து லட்சம், இருபது லட்சம் bank loan போட ஆயிரம் யோசனை செய்து கடைசியில் எல்லா விலையும் ஏறி, நமது லோன் பணத்தில் ஒன்றும் வாங்க முடியாது என்ற உண்மை உறைத்ததுதான் மிச்சம். List படிங்க உங்களுக்கும் தலை சுத்தும்.
- courtesy behindindia.com
- thatstamil.com

முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது டெல்லியிலிருந்து வெளியாகும் தி அதர் சைட் பத்திரிகை.

இந்தப் பத்திரிகையின் ஆசிரியர் ஜார்ஜ் பெர்ணான்டஸ். கருணாநிதியின் நீண்ட கால நண்பரும் கூட.

இந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள விவரங்களைப் பார்த்து பிரதமர் உள்ளிட்ட டெல்லி தலைவர்கள் ஆடிப் போய்விட்டதாக பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள்.
அந்த பத்திரிகை வெளியிட்டு உள்ள பட்டியல்:

1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

2. முரசொலி மாறனின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 5 கோடி.

3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு - மதிப்பு 2 கோடி.

4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு - மதிப்பு 4 கோடி.

5. கோபாலபுரத்தில் மு..முத்துவின் வீடு - மதிப்பு 2 கோடி.

6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு - மதிப்பு 5 கோடி.

7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு - மதிப்பு 2 கோடி.

8. சி..டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு - 12 கோடி.

9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.

10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு - 10 கோடி.

11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு..ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு - 2 கோடி.

12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு - 2 கோடி.

13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் - 100 கோடி.

14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு - 10 கோடி.

15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு - 2 கோடி.

16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் 'முரசொலிஅலுவலகக் கட்டடத்தின் மதிப்பு - 20 கோடி.

17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு - 5 கோடி.

18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு - 100 கோடி.

19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு - 50 கோடி.

20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 4 கோடி.

21. பெங்களூரு - மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 80 கோடி.

22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு - 120 கோடி.

23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு - 108 கோடி.

24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு..தமிழரசுவின் 'ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்மதிப்பு - 48 கோடி.

25. அந்தியூரில் இருக்கும் மு..தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.

26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு - 50 கோடி.

27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு - தெரியவில்லை.

28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை.

29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் - மதிப்பு தெரியவில்லை

30. முரசொலி அறக்கட்டளை - மதிப்பு தெரியவில்லை

31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் 'வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.

32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு - தெரியவில்லை.

33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு - தெரியவில்லை.

34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு - 1 கோடி.

35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்

36. மதுரை வடக்கு தாலுக்கா - உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.

37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு - 2 கோடி.

38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு - 5 கோடி.

39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு - 40 லட்சம்.

40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு - 1 கோடி.

42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு - 2 கோடி.

44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு - 60 லட்சம்.

45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 20 லட்சம்.

46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு - 5 கோடி.

49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு - 50 லட்சம்.

50. சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு - 2.5 கோடி.

51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு - ரூ 3 கோடி.

52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு - 3 கோடி.

53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு - 1 கோடி.

54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு - 2 கோடி.

55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு - தெரியவில்லை.

56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட 'தயா சைபர் பார்க்மதிப்பு - தெரியவில்லை.

57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் 'தயா டெக்னாலஜிஸ்என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு - 1 கோடி.

58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-) மதிப்பு - 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.

59. 'வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு - 20 கோடி.

60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 30 கோடி.

61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு - 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.

62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு - 90 கோடி.

63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை

64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது - மதிப்பு தெரியவில்லை.

65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.

66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்களுடையதே.

67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் 'சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ - மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.

68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.

69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்

Thursday, January 13, 2011


ஜோக்கராய் தெரிந்த சுப்ரமணியம் சுவாமி ஸ்பெக்ரம் மூலமாய் ஹீரோவாகி விட்டார். கீழே இணைத்துள்ள விடியோக்களை பார்த்தால், அவர் தெளிவாகத்தான் சொல்கிறார், நமது பகுத்தறிவும்(!) இப்படியும் நடக்குமா என்ற நமது ஐயமும் அவரை ஜோக்கராக்கி விட்டது புரியும். என்ன கண்டு பிடித்தாலும், என்ன JPC வைத்தாலும் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற உண்மை கசப்பாய் கசக்கிறது. போர்பொஸ் மூலம் Hindu சர்குலேசனும் அதிகமானதும், வி.பி.சிங் பிரதமரானதும் தான் மிச்சம். -ஹர்ஷத் மேத்தா கேஸ் எங்கே என்று இன்று தேட வேண்டும். தெகல்கி மண்டையை போட்டுவிட்டார் என்பது மட்டுமே நமக்கு தெரியும். சர்காரியா கமிஷன் அறிக்கைக்கு பிறகு மூன்று முறை முதலமைச்சராகிவிட்டார் கருணாநிதி. திருவாரூர் to சென்னை திருட்டு ரயில் நிலையில் இருந்தவர், ஆசியாவின் அதி பணக்காரர் லிஸ்ட்டில் தான் சேர்ந்தது பத்தாது என்று மொத்த குடும்பத்தையும் சேர்த்துவிட்டார். கடுமையான தண்டனை, சதாம் உசேன் மாதிரி நடு வீதியில் தூக்கு என்றானால் குற்றம் கம்மியாகலாம் (சதாம் உசேனின் கதிக்கு அமெரிக்க அரசியல் காரணம் என்பது வேறு விஷயம்)

இந்த விடியோக்களில் பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை....கேட்பதற்காக மட்டுமே ஏராளமான விஷயம் இருக்கிறது. ஆகையால் வழக்கம் போல் ஆபிஸில் Blog படிக்காமல், வீட்டில் மெதுவாய் இந்த post ஐ படியுங்கள் / கேளுங்கள்...ofcourse பாருங்கள்.

இந்த வார துக்ளக் 'நினைத்தேன் எழுதுகிறேன்' பகுதியில் சோ எழுதியவை இந்த் விடியோக்களுடன் சம்பந்தமாதலால் அது அப்படியே கீழே..

"...ஸ்விட்சர்லாந்த் வங்கிகளில் சுமார் கோடி ரூபாயாக ஆரம்பித்து, இப்போது கோடி ரூபாயாக உயர்ந்திருக்கக் கூடிய கணக்கை, ராகுல் காந்திக்காக சோனியா காந்தி நிர்வகித்து வருகிறார் - என்று குருமூர்த்தி ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். அதில் 'இந்த விஷயத்தை முன்பு சுப்ரமணியம் ஸ்வாமி எழுப்பினார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நூரானி இது பற்றி எழுதினார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்தர் பூரி எழுதினார். பின்னர் நானும் (குருமூர்த்தி) எழுதினேன். ஆனால், ஒருவர் மீது கூட அவதூறு செய்வதாக நடவடிக்கை இல்லையே, ஏன்? அட, எங்கள் மீதுதான் நடவடிக்கை இல்லை என்றால் - இதை முதலில் ஆதாரபூர்வமாட வெளியில் கொண்டு வந்த ஸ்விட்சர்லாந்து நாட்டுப் பத்திரிகை மீதும் ஏன் நடவடிக்கை இல்லை? அவதூறு என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? என்று கேட்டிருக்கிறார் குருமூர்த்தி. இது தவிர, ரஷ்ய உளவு ஸ்தாபனமாகிய கே.ஜி.பி., ராஜிவ்காந்தி குடும்பத்தினருக்கும், சோனியா காந்தியின் தாயாருக்கும் பணம் கொடுத்து வந்தது என்று வெளியாகிய தகவலையும் சுட்டிக் காட்டியிருக்கிறார். இதற்கும் ஏன் நடவடிக்கை இல்லை? என்று கேட்டிருக்கிறார்...."Dr. Swamy on Sonia Gandhi's KGB moneyDr. Swamy on Sonia Gandhi's birthand birth certificateDr. Swamy on Sonia Gandhi's citizenshipDr. Swamy on Sonia Gandhi'seducationDr. Swamy on Sonia Gandhi's employmentDr. Swamy on the role of NRIs and legal opinionDr. Swamy on INOC and Sonia Burden of Proof for lawsuitDr. Subramaniam Swamy on Sonia's family smugglilngDr. Swamy onRahul Gandhi's education & citizenshipDr. Swamy gives his legal analysis Dr. Swamy gives his legal analysis

Tuesday, October 26, 2010


ஏழு எட்டு மாதங்கள் உருண்டோடிவிட்டது. நீண்ட நெடிய அயர்வான கால கட்டங்கள். புலம் பெயர்ந்து, உயிர் இழந்த வலி உணர்ந்த நாட்கள். உள்ளுர், வெளியூர், வெளி-நாடு என்று நிறைய பயணங்கள். அயர்ச்சியும், அழுகைகளும் போக சொச்சமாய் மகிழ்ச்சி மிச்சம். ஜயகாந்தனின் திரையுலக அனுபவங்கள், சிலமுறை படித்த சுஜாதாவின் கணைழாளியின் கடைசிப்பக்கங்கள், தேவனின் சிறுகதைத்தொகுப்பு என்று சில புத்தகங்கள் மட்டுமே படித்ததாய் ஞாபகம். தயாளு அம்மாளின் தங்கை பேத்தி கடைத்திறப்பு விழா போன்ற நேரத்தை விழுங்கும் வெட்டிச்செய்திகளுக்கு இடையே எனது வேலை சம்பந்தமாய் சில அறிந்தது ஆறுதல். சென்ற இடங்களும், சந்தித்த மனிதர்களும் என்றுமே புதியன. அவை பற்றிய பதிவுகள், எண்ணங்கள் தொடர்ச்சியாய் தொடரும் இனி...

Saturday, November 7, 2009

சென்ற வார விடுமுறை நாட்களில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பொழுது அவரது வீட்டு டிவி பிண்ணனியில் அதிகமாய் அலறிக்கொண்டிருந்தது. அவருடன் பேச ஆரமித்ததிலிருந்து எனது முதன்மையான கவனம் பிண்ணணியில் (அவரது குரலே பின்ணணி!!!) ஓடிக்கொண்டிருக்கும் அந்த விளம்பர சத்தத்திலேயே நிலைத்திருந்தது. மற்றவர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற நிலையில் ஒலியை குறைத்துக்கொள் என்று வேண்டுகோள் விடுக்க முடியவில்லை. செல்போன் என்ற சௌகரியமான சாதனத்தால் அவர் என்னை அந்த விளம்பர சத்தத்திலிருந்து விடுபட வைத்து அவர் பேச்சை முதன்மைப்படுத்தினார். விளம்பர ஒலி மெல்ல மெல்ல கறைந்து எனது கவனம் அவர் பேச்சில் செல்லவிருந்த சமயம் காதில் விழுந்த பாட்டால் மீண்டும் நண்பரின் குரல் பின்னுக்குத்தள்ளப்பட்டது.

நல்ல வேளையாய் அந்தப்படத்தைப் பற்றியும், பாட்டப்பற்றியும் பேச்சு திரும்பியதால் மீண்டும் நண்பரின் குரல் முதன்மைப்பட்டது. ஒருவேளை நண்பர் டிவியை விட்டு நகராமல் நின்றிருந்தால் பாட்டில் மனம் லயித்து, அவர் குரல் அரைகுறையாய் கவனிக்கப்பட்டிருக்கும். தப்பினார் அவர்.

அந்த பாடல், உன்னால் முடியும் தம்பியில் வரும் என்ன சமையலோ...என்ற பாடல். பாலசந்தர், கமல், படம் வந்த பழைய காலம் என்று பலதும் சிலாகித்தபின், கல்யாணி, மோகனம், வசந்தா, மத்தியமாவதி என்று ராகமாலிகையாய் வார்த்தை, காட்சி, கதை என்று கவனித்து பார்த்து பின்னி பிணைத்து இசையமைத்த இளையராஜாவை பற்றி என்ன சொல்ல என்றேன் நான். நண்பர் எனக்கு எங்கள் ஆபிஸில் வேலை செய்யும் வசந்தாமணியைத்தான் தெரியும் என்ற ரீதியில், எனக்கு கல்யாணியையும், வசந்தாவையும் சத்தியமாய் தெரியாது என்று வழக்கம் போல் முடித்துக்கொள்ள நானும் வழக்கம்போல ஏண்டா சொன்னோம் என்று நொந்து நூலானேன்.

நன்கு இசையை ரசிக்கும் என் நண்பர்களில் பலர், ஏனோ ரசிப்பை மேம்படுத்திக்கொள்ள ஆழச்செல்ல ஆர்வப்படுவதில்லை. அவர்களுக்காய் இந்தப்பதிவு (அப்பாடா, ஒரு வழியாய் பதிவுக்கான காரணத்தை கண்டுபிடித்துவிட்டேன்)

ராகமாலிகை என்பதை தாண்டி, இப்பாட்டில் "சாதம் ஆக தாமதமா" என்ற வாலியின் வரியைக் கூட ராஜா "சா தா மா கா, தா மா தா மா" என்று கல்யாணியில் ஸ்வர வரிசைப்படுத்தி பிரமாதப்படுத்தி இருப்பார். இப்பாட்டை பல முறை நீங்கள் கேட்டிருந்தாலும், ஸ்ரவம் என்பதால் ஒருவித அசௌகரியமாய், வேண்டாத, புரியாத சமாச்சாரமாய் ஒதுக்கி இருந்தால் அடுத்த முறை கேட்கும் பொழுது கவனியுங்கள். புரிந்து கேட்பதில் எவ்வளவு சுகம் இருக்கிறது என்பதும் புரியும். பாலசந்தர் மாதிரி ஆட்களுக்கு மட்டுமே இந்த மாதிரி தேவையானதை சரியாய் இளையராஜாவிடம் கேட்டுப்பெற தெரிந்திருக்கிறது என்பது அவர் படங்களை பார்த்தால் தெரியும். கற்றாரே கற்றாரே காமுறுவர்?

பாட்டில் உள்ள டெக்னிகல் சமாசரங்களை அறிய முற்படும் காலங்களில், அதை முழுமையாய் ரசிக்க இயலாமல் போவது தவிர்க்க இயலாதது. இதை தவிர்க்க பலமுறை கேட்க முற்படலாம். அறிந்து கொள்ள, கொள்ள நன்றாய் ரசிக்கலாம் என்பதை தவிர, நல்ல இசை, கேட்ட இசை என்ற பாகுபடுத்துதல் எல்லாம் தேவையில்லாதது. Simple definition ஆய் மனதை கிளரும் (நவரசத்தில் எது வேண்டுமானாலும் இருக்கலாம்) இசையே நல்ல இசை என்பதாய் என்பதாய் எனது எண்ணம். ரசனையும், இசையும் கால நேரங்களுக்கு உட்பட்டது. என் அப்பா, ரேடியொவில் ரசித்த பல பாடல்களை ரசிக்க விடாமல், ரேடியொவின் கழுத்தை அன்னாட்களில் நெறித்த நான் தற்பொழுது அதில் ரசிக்க பல விஷயங்கள் இருப்பதை உணருகிறேன். என் நண்பர், காதல் தோல்வியில் இருந்த பொழுது உருகி உருகி ரசித்த ரோஜா பட "காதல் ரோஜாவே" பாட்டை அவரால் Ipod சகிதம் பிசினஸிற்காய் ஊரூராய் சுற்றும் பொழுது ரசிக்க இயலவில்லை. கேட்டால் அது எல்லாம் ஒரு காலம்டா என்பார்.

ராகம், ஸ்வரம், ஸ்ருதி போன்ற இசையின் அடிப்படை வார்த்தைகளுக்கு கூட அர்த்தம் தெரியாமல் அபாரமாய் எல்லா இசையும் ரசிக்கும் என் நண்பர்களை குழப்புவதற்காய் என்னால் ஆன முயற்சி கீழே.

ஸ்ருதி - ஆதார சப்தம். இதன் அடிப்படையாய் பிற சப்தங்கள் ஒரு வறைமுறைக்குட்பட்டு எழுப்பப்பட அது இசையாகிறது. Commonly refers musical pitch. determined by auditory perception
ஸ்வரம் - ஒரு இசையின், சப்ததின் ஒரு சிறிய பகுதி. Type of musical sound for a single நோட்
ராகம் - ஒரு சட்டத்திற்கு உட்பட்ட, ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட சத்தம்.
தாளம் - குறிப்பிட்ட கால இடைவேளையில் ஓரே சீராய் தட்டி எழுப்பப்படும் ஓசை என்பதாய் கொள்ளலாம்
ராகமாலிகை - பல ராகங்களின் சேர்க்கை
பல்லவி - பாடலின் முதன்மையான வரிகள்
அனுபல்லவி - பல்லவிக்கு அடுத்து வருவது
சரணம் - பாடலின் கருத்துப்பகுதி

இசையை புரிந்து ரசிக்க முயற்ச்சிகிறேன் என்பதை தாண்டி "சாமி சத்தியமாய்" எனக்கு எதுவும் தெரியாதுங்கோ...நல்லா தெரிஞ்சவங்க ஏதாவது எதாவது குத்தம் குறை இருந்தா சரியாய் சொல்லிக்கொடுத்து, மனிச்சு விட்டுடுங்கோ சாமியோவ்.....

Wednesday, October 21, 2009

கடந்த ஒரு மாதத்திற்கு மேலான காலத்தை அலுவலக வேலை பளுவும், குடும்ப சுமையும் சுவீகரித்துக்கொண்டு விட்டதால், மெயில் பார்ப்பது என்பதை தாண்டி எதையும் செய்ய தோன்றவில்லை. கொலம்பஸ் நாள் சேர்த்த தொடர் விடுமுறை நாட்களில், ஆயாசமாய் உட்கார்ந்து படிக்க நினைத்த விஷயங்களை படிக்கவும் நெட்டில் மேயவும் முடிந்தது. வலை தளங்களில் கடந்த நாட்களில் அதிகம் அடிபட்டது நோபல் பரிசு வெங்கடராமனனும், அமைதியான ஒபாமாவும்தான்.

வேதியியல் பற்றிய ஒரு அறிவும் நமக்கு இல்லை என்பதாலும், அதில் அறிவு அதிகம் உள்ளவர்கள் அதிகம் விமர்ச்சிக்காததாலும் அவர் பரிசுக்கு தகுதி உள்ளவராகவே அறியப்படுகிறார். ஒன்பது மாதங்கள் அமைதியாய் இருந்ததற்க்காய் ஒபாமாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்துவிட்டார்கள் போலிருக்கிறது. நோபல் பரிசு குழுத்தலைவர் ஒபாமாவின் அமைதிக்கான முயற்சியை ஊக்கப்படுத்தத்தான் இந்தப்பரிசு என்றிருக்கிறார். நோபலின் உயில் படி ஒரு துறையில் முன்னோடியாய் செயல் பட்டவர்களுக்கே பரிசு தரமுடியும் என்ற நிருபர்களின் கேள்விக்கு பதில் அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.

காந்திக்கு பரிசு இல்லை ஒதுக்கியவர்கள் ஒபாமாவிற்கு பரிசு கொடுத்து கிட்டத்தட்ட நோபல் பரிசை நம்மூர் கலைமாமணி விருது ரேஞ்சுக்கு கொண்டுவந்து விட்டார்கள். இதை எழுதும் பொழுது அனாவசியமாய் நடிகர் விவேக் பத்மஸ்ரீ வாங்கியது வேறு நினைவுக்கு வந்து தொலைக்கிறது. வீதிக்கு வந்தபின் விமர்ச்சனத்திற்க்கு தப்பமுடியாது என்று ஜெயகாந்தன் சொல்லியது போல், ஒபாமா தவிர அல்கொய்தாவில் உள்ள குப்பனுக்கோ, சுப்பனுக்கோ அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்திருந்தாலும் கூட இவ்வளவு விமர்ச்சனம் எழுந்திருக்காது.

விருப்பு, வேறுப்பு, அரசியல் எங்குதான் இல்லை. எல்லா பீயும் நாறும் என்பதே நிதர்சனம்

தமிழ்ப்படுத்தாத ஆல்பிரட் நோபலின் உயில் கீழே
" The whole of my remaining realizable estate shall be dealt with in the following way:

The capital shall be invested by my executors in safe securities and shall constitute a fund, the interest on which shall be annually distributed in the form of prizes to those who, during the preceding year, shall have conferred the greatest benefit on mankind. The said interest shall be divided into five equal parts, which shall be apportioned as follows:

one part to the person who shall have made the most important discovery or invention within the field of physics; one part to the person who shall have made the most important chemical discovery or improvement; one part to the person who shall have made the most important discovery within the domain of physiology or medicine; one part to the person who shall have produced in the field of literature the most outstanding work of an idealistic tendency; and one part to the person who shall have done the most or the best work for fraternity among nations, for the abolition or reduction of standing armies and for the holding and promotion of peace congresses.

The prizes for physics and chemistry shall be awarded by the Swedish Academy of Sciences; that for physiological or medical works by Karolinska Institutet in Stockholm; that for literature by the Academy in Stockholm; and that for champions of peace by a committee of five persons to be elected by the Norwegian Storting. It is my expressed wish that in awarding the prizes no consideration whatever shall be given to the nationality of the candidates, so that the most worthy shall receive the prize, whether he be Scandinavian or not. " —Alfred Nobel, Alfred Nobel's Will.

Friday, October 16, 2009

வேலை, ப்ரொஜெக்ட் பயம் ஒதுக்கி, எதிர்கால கவலை, சிந்தனை தொலைத்து, அம்மா அப்பாக்களின் சுமை புரியாமல் புத்தாடையுடன் வாயில் நீர் ஓழுக வீடுதோறும் வாங்கிய இனிப்பை சுவைத்துத்திரிந்த 'கவலை' வார்த்தை தெரியா காலத்தை, வெடிக்கா வெடியை உறித்தாவது கொளுத்தி மகிழ்ந்த முனைப்பு என்ற பயமறியா பருவ மன நிலையை தீபாவளி நாளிலிருந்து வரும் எல்லா நாள்களிலும் கொடு இறைவா...என்னாளும் தீபாவளி ஆக வாழ்த்துக்கள்