Saturday, July 25, 2009

செத்தும் கொடுத்தான் சீதக்காதி. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, இவருக்கு சரியாய் பொருந்தும். இறப்பதற்கு முன் இவர் செய்த ஒத்திகை நிகழ்சியின் வீடியோவை சோனி கம்பெனி 50 மில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவில் இருந்து ஏலம் விட்டிருக்கிறது. Paramount, Universal, 20thCentury, Warner Bros என்று பல பெரிய தலைகள் வியாபார அடிதடியில் இறங்கியிருக்கின்றன. பேரம் படிந்தபின் பெரிய திரைகளில் மக்கள் பார்த்து 'ஜென்ம சாபல்யம்' அடையலாம். இதை தவிர இவர் இறந்ததனால் ஏற்பட்ட CD, படங்கள் விற்பனை, ராயல்டி தொகைகள் போன்றவை இவரை கடனை அடைத்தாலும் கையில் நிறைய காசுடன் இருக்கும் (இருந்த) கோடீஸ்வரனாக்கி இருக்கிறது.

இறந்தபின் ஏறத்தாழ ஒரு மாத காலம் பிணத்தை வைத்துக் கொண்டு இவர்கள் அடித்த கூத்து கொஞ்ச நஞ்சமல்ல. இருக்கும், கிடைக்கும் சொத்திற்கான அடிதடி ஒரு புறம் தொடர, இறந்த தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே amezon.com லிருந்து அமெரிக்காவின் சந்து பொந்து கடை வரை எல்லாவற்றையும் ஜாக்சன் மயமாக்கி காசு பார்த்துவிட்டார்கள். பனியன், ஜட்டி, துண்டிலிருந்து குழந்தைகள் விளையாடும் பந்து வரை எல்லாம் ஒரே ஜாக்சன் மயம்தான். டிவிக்களையும், பத்திரிக்கைகளையும் பற்றிஎதுவும் சொல்லுவதிற்க்கு இல்லை. நம்மூர் ஆனந்தவிகடனிலிருந்து அமிஞ்க்கரை போஸ்ட் வரை ஜாக்சன் பற்றிய பல செய்திகளை போட்டு அவரை மகாத்மா ரேஞ்சிற்க்கு உயர்த்தியபின் இவர்கள் என்ன விட்டு விடுவார்களா?

Professionalism என்ற வார்த்தையை சொல்லி எதையும் நேர்த்தியாய் வியாபாரமாக்குவதில் அமெரிக்கர்கள் எப்பொழுதும் 'கை' தேர்ந்தவர்கள். இன்று தகனம், அன்று அடக்கம் என்று புலி வருது, புலி வருது கதையாய் இழுத்து கடைசியில் டிக்கெட் போட்டு ஒரு showவுக்கு ஏற்பாடு பண்ணி ஒரு வழியாய் வியாபாரத்தை முடித்தார்கள் என்று பார்த்தால், Jackson rehearsal footage என்று அடுத்த வியாபாரத்தை ஜம்மென்று தொடங்கிவிட்டார்கள். "பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்" என்பதன் பொருளை நன்றாய் அறிந்தவர்கள்.


நியூயார்க் Times square ல் பெரிய திரையில் சவ அடக்க நிகழ்ச்சியை காண தெருவில் இடம் பிடிக்க மடக்கு நாற்காலிகளுடனும், கையில் துண்டுடனும், வெயில் காலம் வேறு ஆரமித்து விட்டதால் பாலின வித்தியாசமின்றி ஜட்டி, பனியனுடன் அலைந்த கூட்டத்தை பார்த்த பொழுது நிஜமாகவே இவர்கள் எல்லோரும் ஜாக்சன் இசையில் மயங்கியவர்கள்தானா? என்ற கேள்வி எழுந்ததை தவிர்க்க முடியவில்லை.

தொக்கி நிற்க்கும் இந்த சில கேள்விகள் இன்னும் சில நாட்கள் பத்திரிக்கைகளின் பக்கத்தையும், பையையும் நிரப்ப உதவும். எப்படி இறந்தார்? ஜாக்சன் வைத்திருந்த குழந்தைகளின் தந்தை யார்? (ஜாக்சனின் குழந்தைகளுக்கு தந்தை யார் என்பது அபத்தமான கேள்வி) ஜாக்சனின் உடல் உண்மையாகவே அடக்கம் செய்யப்பட்டுவிட்டதா?

நமக்கு அவரது இசையை முழுமையாய் கேட்க்கும் பாக்கியம் இன்னும் கிட்டவில்லையாதலால் இப்போதைக்கு அவரது இசை பற்றிய மேதாவிலாசங்களை சொல்லாமல் விட்டுவிடுவோம். இறந்த மனிதனின் வாழ்க்கையை பற்றி விமர்சிப்பது நாகரீக குறைபாடதலால் அதுவும் எழுதாமல் விடப்படுகிறது இங்கு.


No comments: