Saturday, May 4, 2013

ஒரிரு மாதங்களுக்கு முன் துக்ளக்கில் வேளங்குடி கிருஷ்ணனின் ஸ்ரீமத் பாகவதம் படிக்க நேர்ந்தது. பாகவதத்தில் சொல்லியுள்ள காலக்கணக்குகளை விளக்கியிருந்தார். படிக்க படிக்க வியப்பாய் இருந்தது. நமக்கு விளங்காத அல்லது விருப்பமில்லாத விஷயங்களை பெரியார், பகுத்தறிவு ஏதாவது ஒரு அடைப்புக்குறிக்குள் அடைத்து அமுக்கி விடுவதே நமது வாடிக்கை. இதில் கொடிமையிலும் கொடுமை அபத்தமான, துளியும் உண்மையும், logicம் இல்லாத விஷயங்கள் Internet லும், News paper, Magazines ல் வந்தாலோ, அல்லது நம்மூர் அறிவு ஜீவிகள் யாராவது பேசி விட்டாலோ கண்முடித்தனமாக நம்புவது. குறிப்பாய் ஆங்கிலத்தில் அயல் நாட்டான் சொல்லிவிட்டால் அந்த கருத்திற்கு எதிராய் பேசுபவன், யோசிப்பவன் ஒரு முழு மூடன்.

நானும் கண்முடித்தனமான நம்பிக்கை எந்த விஷயத்திலும் கொண்டவனில்லை. முடிந்தவரை புரியாத விஷயங்களை மட்டம் தட்டாமல், புரிந்து கொள்ள முடியுமா என்று பார்க்கிறேன். சரியான விளக்கம் ஒருவரிடம் கிடைக்கவில்லை என்றால் சரி இவரும் நம்ம கேஸ் தான் என்று நகர முயல்வேன். ஊர் பெயர்கள் போன்று வார்த்தைகளும், கருத்துக்களும் திரிந்துதான் தலைமுறை கடக்கிறது. ஆற்றில் ஓடும் குழாங்கல்லாய் சொல்லும், மொழியும், கருத்தும் புதிது புதிதாய் ஒவ்வொரு நொடியும் ஜனித்துக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த உண்மையை உணர தலைபடும் பொழுது, காலம்தான் கடவுள், இந்த பிரபஞ்சத்தில் நான் யார் என்பதான தத்துவ விசாரணையே மிச்சமாகிறது.

Second, Hour என்பதை தாண்டி எதுவும் தற்காலத்தில் இருப்பதாய் தெரியவில்லை. Second யை வேண்டுமானல் millisecond, microsecond என்று பிரிக்கலாம். அப்படியே இவ்வளவு விரிவான காலக்கணக்கு இருந்தாலும், அது ஏற்படுத்தப்பட்ட காலமும், நம்முடைய காலக்கணக்குக்கும் இடையே ஆன காலக்கணக்கை என்னவென்பது? நல்ல விஷயம் என்பதாய் நினைப்பதை உடனே பகிர்தல் நலமாதலால் வேளங்குடி கிருஷ்ணனின் எழுத்துக்கள் அப்படியே கீழே...

சில வருடங்களுக்கு முன் படித்த யுகக் கணக்கின் postம் உங்கள் பார்வைக்கு...

http://www.harish-sai.blogspot.in/search/label/Religion%20%2F%20God

"......

2 பரமாணுக்கள் = ஒரு அணு
3 அணுக்கள் = ஒரு த்ரிஷரேணு
3 த்ரிஷரேணு = ஒரு த்ருடி
100 த்ருடிகள் = ஒரு வேதம்
3 வேதங்கள் = ஒரு லவம்
3 லவம் = ஒரு நிமிஷம்
4 நிமிஷம் = ஒரு க்ஷணம்
5 க்ஷணங்கள் = ஒரு காஷ்டா
15 காஷ்டா = ஒரு லகு
15 லகு = ஒரு நாழிகை
2 நாழிகை = ஒரு முக்ஷீர்த்தம்
30 முக்ஷீர்த்தம் = ஒரு நாள்
60 நாழிகை = ஒரு நாள்
இரண்டரை நாழிகை = ஒரு மணி
24 நிமிஷம் = ஒரு நாழிகை
48 நிமிஷம் = ஒரு முக்ஷீர்த்தம்
60 நிமிஷம் = ஒரு மணி
24 மணி = ஒரு நாள்

நம்முடைய ஒரு நாள் 24 மணி நேரங்கள் கொண்டது. அதில் 60 நிமிஷங்கள் ஒரு மணி நேரம். புராணத்தின்படி ஒரு 48 நிமிஷம், ஒரு முக்ஷீர்த்தமாய் சொல்லப்படுகிறது. அதே 24 நிமிஷங்கள் ஒரு நாழிகை. ஒரு நாளில் 60 நாழிகை இருக்கும். ஒரு மணி நேரம் என்பது இரண்டரை நாழிகைகள். முப்பது முக்ஷீர்த்தம் ஒரு நாள். இரண்டு நாழிகை ஒரு முஷீர்த்தம். 15 லகு ஒரு நாழிகை. 15 காஷ்டா ஒரு லகு. 5 க்ஷணங்கள் ஒரு காஷ்டா. நான்கு நிமிஷங்கள் ஒரு க்ஷணம். மூன்று லவம் ஒரு நிமிஷம். (இந்த நிமிஷம் நாம் ஆங்கிலத்தில் கூறும் மினிட் அல்ல) மூன்று வேதங்கள் ஒரு லவம். 100 த்ருடிகள் ஒரு வேதம். மூன்று த்ரிஷரேணுகள் ஒரு த்ருடி. மூன்று அணுக்கள் ஒரு த்ரிஷரெணு. 2 பரமாணுக்கள் ஒரு அணு. காலத்தின் மிகச்சிறிய அளவே பரமாணு என்று சொல்லப்படுகிறது.

ஒரு கணக்கிற்காக கூறுகிறேன். ஒரு நாழிகை 24 நிமிடங்கள் என்று எழுதியிருந்தேன். மேற் சொன்ன அட்டவணையின்படி வகுத்துக் கொண்டே போனால், ஒரு பரமாணு = 0.000000333 நிமிடங்கள் (மினிட்ஸ்) அல்லது ஒரு பரமாணு = 0.00002 வினாடிகள் (செகண்ட்ஸ்). இந்த அளவுக்குத் துல்லியமாக ரிஷிகள் கணித்துக் கூறியுள்ளார்கள். பதினைந்து நாட்கள் சேர்ந்தது ஒரு பக்ஷம். அது வளர்பிறை, தேய்பிறை என்று இரண்டாக உள்ளன. இரண்டு பக்ஷங்கள் சேர்ந்ததால், ஒரு மாதம். இரண்டு மாதங்கள் ஒரு ருதுவாகச் சொல்லப்படுகிறது. அதாவது சித்திரை, வைகாசி வசந்த ருதுவென்றும், ஆனி, ஆடி க்ரிஷ்ம ருதுவென்றும், ஆவணி, புரட்டாசி வர்ஷ ருதுவென்றும், ஐப்பசி கார்த்திகை சரத ருதுவென்றும், மார்கழி, தை க்ஷேமந்த ருதுவென்றும், மாசி, பங்குனி சிசிர ருதுவென்றும் சொல்லப்படுகிறது.

ஆறு ருதுக்கள் சேர்ந்தால், ஒர் ஆண்டு அல்லது ஒரு வருஷம் என்று சொல்லப்படுகிறது. இந்த வருடமே ஸம்வத்ஸரம், பரிவத்ஸரம், இடாவத்ஸரம், அணுவத்ஸரம், வத்ஸரம் என்று ஐந்து வகைப்படுகின்றது. இவை சூரியன், ப்ருஹஸ்பதி, நாள், சந்திரன், 27 நக்ஷ்த்திரங்கள் ஆகியவற்றை குறித்து மாறுபடுகின்றன................ ."

......

மே மாத சென்னை வெயில். இரவிலும் வெப்பம் குறைந்தபாடில்லை. துக்ளக்கை பார்த்து படித்து தமிழில் type செய்ததில் வியர்த்து ஓழுகுகிறது. ஜன்னலை திறந்து விட்டேன். காற்று உடம்பில் பட சுகமான சுகம். Vicks மிட்டாயை வாயில் பொட்டு வாயை திறந்து காற்றை இழுக்க தொண்டையில் ஏற்படும் ஜில்லிப்பு போன்ற ஒரு சிலிர்ப்பு. ஜனனல் வழி தெரியும் வானத்தில் நட்சத்திரங்கள் மினுமினுகின்றன. பல ஒளியாண்டை கடந்து வந்த ஒளி. ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு சூரியன் என்று பள்ளி காலத்தில் படித்தது நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு பூமி என்ற கணக்கில் இருக்குமானல்...? உயிரிகள் இல்லாமலும், உயிரின, தாவரங்களுடனும், அம்மண மனிதர்கள் முதல் advance மனிதர்கள் வரை எல்லா யுகமும் வியாப்பித்து, காலத்தால் சூழப்பட்டு இந்த பிரபஞ்சம் வேவ்வெறு யுகமான பூமிகாளால் நிறைந்து கிடக்கிறது. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. எல்லாம் புரிந்து பேசாமல் இருக்க ஞானியாகாவோ அல்லது எதுவும் புரியாமல் அதிகம் பேசும் பகுத்தறிவாளனாகவோ நான் இல்லை. எதுவும் தெரியாத ரெண்டும் கெட்டான். ஒன்று மட்டும் தெரிகிறது திருவள்ளுவர் தயவால்...

" பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் "
No comments: