Saturday, March 7, 2009

மதம் சம்பந்தமாய் சமீபத்தில் படித்த, பார்த்த, அனுபவித்த சில விஷயங்களை எழுத முற்படுகிறேன். உணர்வு பூர்வமான விஷயமாதலால் சிறிது தயக்கம். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. அவ்வாறு ஆனால் மன்னிக்க. அலுவலக வேலை அதிகமானதால் எழுத நினைத்தவை பல விடுப்பட்டுப்போயின.

அந்த நாள் காலை அலுவலகம் செல்லும் கூட்டத்தில் நானும் ஒருவன். ஒரு வழியாய் நியுயார்க் சப்-வே வந்தடைந்தபின் உக்கார ஒரு இடம் கிடைத்தது. நம்மூர் தாம்பரம் - எக்மோர் பயணத்திற்க்கும் இதற்க்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. நம்மூரில் இருக்கும் புழுக்கமும், வியர்வையையம், ஒருவரை ஒருவர் இடித்தலும் இங்கு இல்லை. அதனால் பல நேரங்களில் பயணம் இனிதாகிறது மிகுந்த கூட்டதிலும். நம்மூர் பிரயாணம் பூமிக்கு மேல். இங்கு கீழ். மேலே இன்னொரு உலகம் நிற்க நேரமில்லாமல், ஓடிக்கொண்டிருக்கும்.

இரண்டு ஸ்டேஷன் வண்டி ஓடியபின் காலியான பக்கத்து இருக்கையில் ஒருவர் வந்து உக்கார்ந்தார். அவரை அடிக்கடி நான் வேலை செய்யும் இடத்தின் அருகில் பார்த்திருக்கிரேன், ஆகையால் ஒரு புன்முருவலை பரிமாறிக்கொண்டோம். அவர் ஒரு ஜுயிஸ் மதத்தை சார்ந்தவர் என்பதை அவர் தோற்றம் உணர்த்தியது. கையில் ஒரு புத்தகத்தை வைத்து படித்து வந்தார். வலமிருந்து இடமாய் பக்கங்களை திருப்பி படிப்பது கவனத்தை கவர பக்கங்களை பார்த்தேன். ஹீப்ரு எழுத்துக்களும் ஏறத்தாழ சமஸ்கிருத சாயலில் இருத்தது. தமிழ்,சமஸ்கிருதம் போல் உலகின் பழமையான ஒரு மொழி. மிதமுள்ள பக்கங்களை படித்தபின் புத்தகத்தை முத்தமிட்டு பையில் வைத்தார். இறங்கும் இடம் இருவருக்கும் வரவில்லையாதலால் அமைதியாய் அமர்ந்திருந்தோம். நான் பார்த்தவரையில் இந்தியரை தவிர யாரும் பரிச்சயம் இல்லாதவருடன் பேச முற்படுவதில்லை. ஆனால் அதிசயமாய் அவர் என்னுடன் பேச முற்பட்டார். இந்தியரா? என்றார். ஆம் என்றேன். மும்பை சம்பவத்தை பற்றி தனது வருத்ததை தெரிவித்தார். அந்த வாரத்தில் தான் மும்பையில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ஜீயிஸ் ஒருவரின் உடல் புருக்ளின்-நியூயார்க் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அவர் என்னுடன் பேசியதற்கு அதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம்.

சிறிது நேரம் அமைதியாய் இருந்தவர், என்ன தோன்றியதோ, என் நெற்றியை சுட்டிக்காட்டி, அது என்ன என்றார். சிறிது நேரம் புரியாமல் விழித்து, என் நெற்றியில் இருக்கும் விபூதியை தான் கேட்கிறார் என்பதை புரிந்து கொண்டேன். முன்பெல்லாம், அமெரிக்கர்களின் வேகம், வழ வழ கொழ கொழ ஆங்கிலத்தில் குறைந்த பட்சம் 20% புரியாமல் விடுபட்டுப்போகும். குறிப்பாய் ஆப்பரிக்க அமெரிக்கர்களின் மொழி, நம்மூர் சென்னை தமிழ் போல புரிதல் கடினம். தற்சமயம் புரியாத விகிதாசாரம் மிகவும் குறைந்திருக்கிறது அவர்களின் மொழியிலும். ரயிலின் ஜன்னல் கண்ணாடியில் என் நெற்றியை பார்த்த பொழுது நெற்றியில் விபூதி மிக லேசாகத்தான் இருந்தது. காலை 6 மணி அளவில் நெற்றியில் வைத்தது 8.30 மணி வரையில் இருந்தது அன்று அவர் கேட்பதற்காகதான் என்பது போல.

என்ன சொல்ல? "நீறு இல்லா நெற்றி பாழ்", "மந்திரமாவது நீறு, வானவர் மேலது நீறு" என்று பழமொழியும், தேவாரமும் பாடி அவருக்கு புரிய வைக்க முடியுமா என்ன? Holy Ash என்று பொத்தாம் பொதுவாய் சொல்லி வைத்தேன். அவரே மதம் சம்பந்தமாய் கேள்வி எழுப்பியபின் நாமும் கேள்வி கேக்காவிட்டால் எப்படி?  எப்படி இந்த முடியில்லா தலையிலும் அந்த அவர்களின் கையடக்க குல்லாவை தலையில் அணிகிறார்கள் ? எவ்வாறு அது கிழே விழாமல் இருக்கிறது என்ற எனது நெடுனாள் ஆச்சரியத்தை அவரிடம் வெளிபடுத்தினேன். குல்லா அணியும் தாத்பரியம் என்ன என்பதை சாமர்த்தியமாய் கேட்டுவிட்டேனாக்கும்! காதின் ஒரத்தில் அவர்கள் வளர்க்கும் சுருள் சுருளான முடி, கருப்பு கால் சட்டை, வெள்ளை சட்டை, நீண்ட அங்கி, கோட், செரலாஹொம்ஸ் கதாபாத்திரத்தை நினைவுட்டும், நீண்ட தொப்பி என்று பல விஷயங்கள் இருப்பினும், அந்த சிறிய குல்லா பார்த்தமாத்திரத்தில் எல்லோரையும் நிச்சயம் கவரும்.

புதிய கான்செப்டை கேட்கப்போகிறோம் என்று நிமிர்ந்து உட்கார்ந்த எனக்கு எனக்கு ஏமாற்றமே!. ஏதோ சொன்னார். என்னால் சரியாய் உள்வாங்க முடியவில்லை. பொதுவாய் அவருக்கு முழுக்காரணம் தெரியவில்லை அல்லது விளக்க தெரியவில்லை என்று சமாதனப்படுத்திக்கொள்ளலாம். எதுவாகிலும் அந்த குல்லா அணியும் காரணம் மட்டும் என்னை வந்து அடையவில்லை. High street Brooklyn Bridge ஸ்டேசஷன் வர 'பை' சொல்லி இறங்கிச்சென்று விட்டார்.

சென்றபின் உரையாடலை யோசித்துப்பார்த்ததில் புரிந்தது, எனக்கும் அவருக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்பது. மதம் வேறாகிலும், செய்யும் காரண காரியம் தெரியவில்லை. நம்மில் பலரும் இவ்வாறுதான். "வாழ்வு முடிந்தபின் ஒரு பிடி சாம்பல் தான்", அக்னியே எல்லாவற்றிலும் பரிசுத்தமானது" என்று பல்வேறு தத்துவங்கள் தோன்றினாலும், சரியான காரணத்தை அன்று அவருக்கு சொல்ல முடியவில்லை என்பது எனக்கு வருத்தம் தான். காரணங்கள் இல்லை என்பது இல்லை. காரணங்களை தேடும் மனதும், ஆர்வமும் என்னுள் இல்லை என்பதுதான் நிதர்சனம். என் அனுபவம் பல நாட்களை கடந்தும் நான் அதே நிலையில் இருக்கிறேன் என்பதே உதாரணம். புறக்காரணங்களை விட்டு கடவுள் தேடல் நம்மில் பலருக்கும் இருக்கிறது. கடவுள் உண்டு என்ற நம்பிக்கை அந்த தேடலை நிச்சயம் அதிகப்படுத்தும்.

இதை எழுதும் வேளையில் இந்த விடியோவை பார்க்க நேர்ந்தது. சரியா தப்பா என்று சரியாய் சொல்ல இயலவில்லை. ஏனெனில், In God we trust  என்று கரன்சியில் அடித்திருக்கும் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் கடவுள் நம்பிக்கை இழந்தோரின் கூட்டம் அதிகமாகி கொண்டேதான் இருக்கிறது. சர்ச் இடித்தலும், விற்றலும் சகஜமாகி விட்டன. இந்த மார்கெட்ங்க்-கு இதுவும் காரணமாய் இருக்கலாம். உணவு கொடுத்தவனே கடவுள், அவன் சொன்னதே வேதம் என்பது வேண்டுமானால் பொருந்தலாம். எவ்வளவு நாள் பொருந்தும் என்பது தெரியவில்லை.


கூட்டத்தை கூட்டியவர்களுக்கும், கூட்டத்தில் சேர்ந்தவர்களுக்கும் கொள்கை பேசுவதற்கும், சலுகைகளுக்கும், சண்டைகளுக்கும் நேரம் இருக்குமே தவிர சாஸ்வதத்தை தேட நேரம் இருக்குமா? இருந்தால் மிக்க சந்தோஷம். மதத்தை பற்றிய பிரக்ஞை எனக்கு எப்பொழுதும் இல்லை. சுற்றம் பார்த்து குற்றம் சொல்ல எனக்கு விருப்பமில்லை. எனது பள்ளிப்படிப்பு முழுவதும் கிருஸ்துவ பாடசாலைகளில் தான். கற்பித்த ஆசிரியர்கள் அனைவரும் கிருஸ்துவர்களே. அன்னாட்களில் புதிய ஏற்பாட்டை நான் படிக்காத நாளில்லை. மதம் கடந்தவர் மகாத்மா என்பதே எனது மதம்.

ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள், உணருங்கள் ஒன்று பரம் பொருள் நாமதன் மக்கள் என்பதை.

கருத்துக்களை சொம்பேரித்தனப்படாமல், தவறாமல் பதியுங்கள்.

1 comment:

களிமிகு கணபதி said...

ஹரிஷ்,

சிந்திக்கக்கூடிய ஒருவரின் பதிவைப் படித்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.

கிறுத்துவக் கல்வி நிறுவனங்கள் ஏன் அதிகம் இருக்கின்றன என்ற கேள்வி எனக்கும் உண்டு.

சமீபத்தில் நான் படித்த ஒரு கட்டுரை இதுகுறித்துப் பேசுகிறது.

அந்தக் கட்டுரையைப் படிக்க:


இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? - 1


இந்திய மதப்பிரிவினை சட்டம் = பண்பாட்டு அழிவு ? - 2