Monday, November 24, 2008

Cho Ramaswamy extraordinary, courageousness person. I always wonder about Cho, even i am not accepting all his views. How daring he express his views clearly in a bold manner. Nothing to say other than surprising greatly. wiki link: http://en.wikipedia.org/wiki/Cho_Ramaswamy
See below his Thuglak thalangam (Cover story?) Apologized, if you don't know tamil.
தேசம், பட்டது போதும் - மும்பை தாக்குதல் பற்றி துக்ளக் தலையங்கம்
தீவிரவாதத்தை முறியடிப்பதில் தன்னுடைய அரசுக்கு இருக்கிற மன உறுதியைப் பிரதமர் தெரிவித்துவிட்டார். தீவிரவாதிகளின், ஒவ்வொரு படுபாதகத்திற்குப் பிறகும், செய்ய வேண்டிய சடங்கு அத்துடன் முடிந்தது. தீவிரவாதிகளினால் பலமுறை தாக்கப்பட்டுள்ள பெருமையைக் கொண்ட நமது நாட்டில், அரசு கற்றுக்கொண்ட ஒரே பாடம், "தாக்குதல் நடந்து, பல சடலங்கள் விழுந்த பிறகு – தீவிரவாதத்தை ஒடுக்குகிற உறுதியைத் தெரிவித்து, பிரதமர் பேசிவிட வேண்டும்' என்பதுதான். "அரசியல் வித்தியாசங்களை மறந்து, எல்லோரும் ஒரே குரலில் பேசி, இந்தக் கொடூரத்தை எதிர்க்க வேண்டும்' என்ற மந்திரமும் ஓதப்பட்டாகிவிட்டது.பம்பாயில், ஓபராய் ட்ரைடன்ட், தாஜ் என்ற இரண்டு ஹோட்டல்களிலும், நாரிமன் ஹவுஸ் என்ற இடத்திலும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் 195 பேரைப் பலி வாங்கிவிட்டது. இதில் அயல்நாட்டினரும் உண்டு. பாதுகாப்பு அதிகாரிகள், விசேஷ படையினர் போன்றவர்களும் உயிர் இழந்திருக்கிறார்கள். பெரும் நாசம்.இந்த முறை, தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக வந்து தங்களுடைய தாக்குதலை நடத்தியுள்ளதால் – இனி துறைமுகங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது, மேலும் ஒரு சம்பிரதாய நடவடிக்கை. இம்முறை தண்ணீர் மார்க்கமாக வந்தால், அடுத்த முறையும் அப்படித்தான் வருவார்கள் என்ற உத்திரவாதம் இருப்பது போல ஒரு அசட்டு எண்ணம். சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தினங்களில்தான் தாக்குதல் நடத்துவோம் – என்று தீவிரவாதிகள் சத்தியம் செய்து கொடுத்திருப்பது போல, அந்த மாதிரி முக்கியமான தினங்களில், பத்திரிகைகள் வியந்து பாராட்டுகிற அளவிற்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்.ஒரு ரயில்வே ஸ்டேஷனிலோ, மார்க்கெட்டிலோ, குண்டுவெடிப்பு என்றால், பலரயில்வே ஸ்டேஷன்களில் சில தினங்கள் கெடுபிடி, சில சந்தைகளுக்குப் பந்தோபஸ்து என்ற சடங்கு நடைபெறும். மற்ற இடங்களுக்கு தீவிரவாதிகள் போகமாட்டார்கள் என்ற ஒரு பித்துக்குளித்தனமான நம்பிக்கை. இந்தப் பாதுகாப்பு லட்சணத்தைப் பற்றி எங்கு போய் முட்டிக்கொள்வது?

பார்லிமென்டிலிருந்து பஸ்ஸ்டாண்ட் வரை, கோவிலிலிருந்து ஹோட்டல்கள் வரை, எல்லா இடங்களும் தீவிரவாதிகளுக்கு இலக்காகக் கூடியவையே என்ற தகவலை, என்றாவது ஒரு முறையாவது நமது உளவுத்துறையினர் கூறியிருக்கின்றனரா? அவர்களுடைய இலக்கு – இந்தியா; இதில் ஹோட்டல் என்ன, துறைமுகம் என்ன... எல்லாமே அடக்கம்தான். ஒரு மிகப்பெரிய கோவிலில் நாசமோ, அல்லது ஒரு பள்ளியில் சிறுவர்களைப் பிடித்து வைத்துக்கொண்டு கொலை வெறியாட்டமோ – தீவிரவாதிகள் நடத்தமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம் இருக்கிறது...?நமது ஆட்சியாளர்களின் முனைப்போ, கதிகலங்க வைக்கிறது. "பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற, பாகிஸ்தானிலிருந்து வந்த, பாகிஸ்தானியர்கள் செய்த வேலை இது' – என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டு, அதே மூச்சில் "பாகிஸ்தான் உளவுத்துறை (கொடுமைக்குப் புகழ்பெற்ற ஐ.எஸ்.ஐ.) தலைவரை அழைத்திருக்கிறோம்' என்று அரசு கூறுகிறது! எதற்காக அவர் இங்கு வர வேண்டும்? நாம் காட்டுகிற ஆதாரங்கள் பைசா பெறாது என்று சர்ட்டிஃபிகேட் கொடுக்கவா? அல்லது நமது அரசின் வசம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று தெரிந்துகொண்டு போகவா? அதுவும் இல்லையென்றால் "ஆஹா! பாகிஸ்தானை இந்தியா குற்றம் கூறியும், அந்நாட்டின் உளவுத்துறைத் தலைவர் இங்கு வருகிறார் என்றால் – அந்நாட்டின் பெருந்தன்மைதான் என்னே!' என்று மற்ற நாட்டினர் வியப்பதற்காகவா? எதற்கு வர வேண்டும் அந்த ஆசாமி இந்த நெருக்கடியான கட்டத்தில்? நல்லவேளை – பாகிஸ்தானிலேயே "இந்தியா கூப்பிட்டால் போய்விடுவதா?' என்று முறைக்கவே, அந்நாட்டின் உளவுத்துறை தலைவர் இங்கு வருகிற யோசனை கைவிடப்பட்டிருக்கிறது.

அசடு வழிவதற்கு ஒரு எல்லை கிடையாது என்று தீர்மானித்துக்கொண்ட நமது அரசின் அணுகுமுறைகள்,இந்த மாதிரி தப்பித்தால்தான் உண்டு.பாகிஸ்தான்தான் காரணம் – ஆனால், அந்நாட்டிற்கு ரயில் விடுவோம், பஸ் விடுவோம், பேச்சு வார்த்தை நடத்துவோம். என்னதான் நடக்கிறது? பாகிஸ்தான் அரசிடம் பயிற்சி பெறுபவர்கள்தான் இந்தத் தீவிரவாத வேலைகளைச் செய்பவர்கள் என்று நமது அரசு நம்புகிறதா? அல்லது பாகிஸ்தான் அரசினரால் கட்டுப்படுத்த முடியாத குழுக்கள் பாகிஸ்தானிலிருந்து இயங்கி, இம்மாதிரிச் செயல்களில் ஈடுபடுவதாக இந்திய அரசு நினைக்கிறதா? அதுவும் இல்லையென்றால், எதற்குப் பாகிஸ்தான் பற்றிய பேச்சு? உண்மையாகவே அந்நாட்டிலிருந்துதான் இந்தத் தீ இங்கே பரவுகிறது என்றால் – அங்கே பயிற்சி முகாம்களை அழிக்க, நமது நாடு முனைய வேண்டாமா?நமக்காகத்தான் தெரியாது என்றால், இஸ்ரேலைப் பார்த்தாவது கற்றுக்கொள்ள வேண்டாமா? இஸ்ரேல் என்றால் உடனே ஓட்டு பயம் வந்துவிடும். இஸ்ரேல் வழி என்றால் இஸ்லாமிய விரோதம் என்றாகி, ஓட்டுப் போய்விடுமே என்ற நடுக்கம்.

அதனால் இப்போது கூட, பம்பாய் நிகழ்ச்சிகளுக்குப் பின், இஸ்ரேல் தனது நிபுணர்களை அனுப்பி உதவி செய்வதாகக் கூறியபோது, அந்த உதவி வேண்டாம் என்று மறுத்துவிட்டது இந்திய அரசு! நமக்கேன் உதவி? நமக்கிருக்கிற அனுபவம் சாதாரணமானதா? தீவிரவாதிகளின் எத்தனை தாக்குதல்களைப் பார்த்துவிட்டோம்! எத்தனை உயிர்களைப் பலி கொடுத்தாகிவிட்டது! இன்னும் எத்தனை பலி வேண்டுமானாலும் கொடுக்க நம்மால் முடியும் என்பதை அறியாத இஸ்ரேல், நமக்கு உதவுகிறதாம்!சரி, இஸ்ரேல்தான் வேண்டாம் என்றால் அமெரிக்க உதவி கூட வேண்டாம். அந்நாடு தனது நிபுணர்களை அனுப்புவதாகக் கூறியும், இந்திய அரசு மறுத்து, அந்த மாதிரி உதவியை ஏற்பதில் ஆர்வம் காட்டவில்லை. அமெரிக்கா, என்ன அமெரிக்கா! ...ஃபூ! ஒரு தாக்குதல் நடந்தது. அவ்வளவுதான். அதற்குப் பிறகு அங்கே என்ன நடந்தது? நாம் அப்படியா? எதையும் தாங்கும் இந்தியா – என்று நிரூபிக்கிற வகையில், எத்தனை தீவிரவாதத் தாக்குதல்களைப் பார்த்துவிட்டோம்!அதனால்தான், சென்ற மாதம் பிரதமருடன் அமெரிக்கா சென்ற நமது அரசின் பாதுகாப்பு ஆலோசகர், "தீவிரவாதத்தை எதிர்கொள்ள அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கைகளைப் பற்றி அமெரிக்க அதிகாரிகளுடன் பேசினேன். அதில் பல நடவடிக்கைகள் மிகவும் கடுமையானவை. நம் நாட்டிற்கு அந்த மாதிரி கடுமையான நடவடிக்கைகள் சரிப்பட்டு வராது' என்று அலட்சியமாகக் கூறிவிட்டார்.

ஏன்? ஏன் நமக்குச் சரிப்பட்டு வராது? அமெரிக்கா ஜனநாயக நாடு இல்லையா? அங்கு மனித உரிமைக்காரர்களின் அழிச்சாட்டியம் இல்லையா? நீதிமன்றங்கள் இல்லையா? அங்கு எடுக்கப்பட்டு வருகிற கடுமையான நடவடிக்கைகள் நமக்கு ஏன் சரிப்படாது? என்ன நடவடிக்கைகள் அவை? தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் "அய்யய்யோ! இது ஆனாலும் கடுமையான அணுகுமுறை' என்று ஒன்று உண்டா? எவ்வளவு கடுமை முடியுமோ, அவ்வளவு கடுமையைக் காட்ட வேண்டிய விஷயம் அல்லவா இது? இன்னமும் எவ்வளவு இடங்கள் தாக்கப்பட்டால் கடுமையைக் காட்டலாம்? இன்னும் எவ்வளவு பேர் செத்தால் கடுமையைக் காட்டலாம்?இவ்வளவு கடுமை கூடாது என்று கூறுகிற இவர் என்ன – தேசியப் பாதுகாப்பு ஆலோசகரா அல்லது தேசிய சால்ஜாப்பு ஆலோசகரா? அவரைச் சொல்லியும் பயனில்லை. அவர் வேலை பார்க்கிற இடம் அப்படி. இந்த அரசுதான் "கடுமையான சட்டங்களே தேவை இல்லை. இருக்கிற சட்டம் போதுமானது' என்று சொல்லி, "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து' என்ற தத்துவம் பேசுகிறதே! இருக்கிற சட்டம் போதும்; இருக்கிற பாதுகாப்பு போதும்; இருக்கிற உள்ளூர் பயிற்சி போதும்; இருக்கிறது எல்லாமே போதும். கொடுத்த பலிதான் போதாது; அது இன்னும் கொடுக்கப்படும். எது போதுமோ, போதாதோ – இந்த மாதிரி ஒரு முனைப்பில்லாத அரசு, ஆண்டது போதும்; போதும்; போதும்!சரி, அரசுதான் இந்த லட்சணத்தில் செயல்படுகிறது என்றால் – போலீஸ், உளவுத்துறை செயல்பாடு எப்படி இருந்திருக்கிறது? "படபடவென்று மானாவாரியாகச் சுட்டுக்கொண்டே போலீஸார் முன்னேற முயன்றனர். இப்படிச் செய்யவே கூடாது' என்று ஒரு நிபுணர் கூறியிருக்கிறார்; இது சரியான கருத்துதானா என்பது நமக்குத் தெரியவில்லை; இது முறையாக பரிசீலிக்கப்படும் என்று நம்புவோம்."

இப்போது பம்பாயில் தீவிரவாதிகளே இல்லை. எல்லோரையும் ஒழித்தாகிவிட்டது' என்று மஹாராஷ்டிரப் போலீஸ் கூறிவிட்டது. எப்படி இவ்வளவு நிச்சயமாகச் சொல்ல முடியும்? வந்தவர்களில், இன்னமும் எத்தனை பேர் பம்பாயில் உலாவுகிறார்களோ! அல்லது வேறு எங்கு போயிருக்கிறார்களோ! அடுத்து என்ன திட்டமோ? போலீஸாரின் இந்த மெத்தனம் கண்டனத்திற்குரியது.போலீஸாரும், விசேஷப் பாதுகாப்புப் படையினரும், எங்கே நுழைகிறார்கள், எந்த இலக்கைக் குறிவைக்கிறார்கள் – என்பதெல்லாம் டெலிவிஷன் சேனல்களில் நேர்முக ஒளிபரப்பாக வந்துகொண்டிருந்தது. இது போதாதென்று படையினரின் பேட்டிகள் வேறு! இவை எல்லாம், தீவிரவாதிகளுக்கு உதவக்கூடியவை அல்லவா? அவர்கள் டெலிவிஷன் பார்த்துக்கொண்டிருந்திருக்கலாம். அதற்கு வாய்ப்பில்லை என்றாலும் வெளியே இருந்தவர்கள் அவர்களுக்குத் தகவல் அளித்துக்கொண்டுஇருந்திருக்கலாம். தீவிரவாதிகள் செல்ஃபோன்களைப்பயன்படுத்திக்கொண்டிருந்ததாகச் செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றனவே! டெலிவிஷன்காரர்களைக் கிட்டே நெருங்கவிட்டிருக்கக்கூடாது."மத்தியப் பாதுகாப்புப் படையினர் வந்து சேர்வதில் பெரும் தாமதம் நிகழ்ந்திருக்கிறது. இது பெரிய பலவீனம் ஆகிவிட்டது' என்று விவரமறிந்தவர்கள் கூறியிருக்கிறார்கள். கவனத்திற்கும், எதிர்காலத் திருத்தத்திற்கும் உரிய விஷயம் இது.மத்திய புலனாய்வுத்துறை, "மஹாராஷ்டிரத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும்' என்று எச்சரித்தும்; "தாஜ் ஹோட்டலே கூட தாக்கப்படலாம்' என்று எச்சரித்தும் – மாநிலப் போலீஸ் ஒரு சில நாட்களுக்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவிட்டு, பின்னர் அதையும் வாபஸ் வாங்கியிருக்கிறது.எவ்வளவு பெரிய அக்கறையின்மையை இது காட்டுகிறது என்று நினைத்துப் பார்த்தால், அதிர்ச்சிதான் உண்டாகிறது. மஹாராஷ்டிரத்தின் விசேஷ "தீவிரவாத எதிர்ப்புப் போலீஸார்' ஏன் அலட்சியமாக இருந்துவிட்டனர்?இக்கேள்விக்கு விடைகாண பெரிய தேடுதல் அவசியம் இல்லை. பம்பாயில் தீவிரவாதிகள் அட்டூழியம் நடப்பதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பாக, அம்மாநிலத்தின் தீவிரவாத ஒழிப்புப் போலீஸின் தலைவர் (இப்போது துரதிருஷ்டவசமாக உயிரிழந்து விட்டவர்) "எங்களுடைய நேரமும், முனைப்பும் 90 சதவிகிதம், மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணையில்தான் செலவிடப்படுகிறது' என்று பெருமைப்பட்டுக்கொண்டார்.

அவ்வளவு முனைப்பை, அந்த விவகாரத்தில் காட்டியபோது, மத்திய புலனாய்வுத் துறையிடமிருந்து வந்த தகவல்களை ஆராய்ந்து, தக்க நடவடிக்கை எடுக்க ஏது நேரம்!"ஆள் பலம் போதவில்லை' என்கிறார்கள். போலீஸுக்குப் போதிய அளவு ஆள் பலம் சேர்க்க வேண்டாம் என்று யார் தடுத்தது? ஆளும் இல்லை; ஆயுதமும் இல்லை; பயிற்சியும் இல்லை! அதனால் என்ன நடக்கிறது? பல போலீஸ் அதிகாரிகள், உயிரிழக்கிறார்கள்.அவர்களுடைய தைரியம் மெச்சத்தக்கது. ஆனால், போலீஸ் உயிரிழப்பா, நாட்டிற்கு வேண்டியது? பாதுகாப்பு வீரர் சாவா, தேசத்தின் தேவை? பகையாளி உயிரை அல்லவா எடுக்க வேண்டும்! ஜெனரல் பேட்டன் என்கிற அமெரிக்க தளபதி, இரண்டாம் உலக யுத்தத்தின்போது, தன் கீழ் பணிபுரிந்த ராணுவ வீரர்களைப் பார்த்து, "தேசத்திற்காக உயிரை விடுவது அல்ல உங்கள் வேலை! உயிரை விடுவதற்காக நீங்கள் ராணுவத்தில் சேரவில்லை! உயிரை எடுக்க வேண்டும். பகையாளிகளின் உயிர்களை எடுப்பதுதான் உங்கள் கடமையே தவிர, உங்கள் உயிரை விட்டுவிடுவது அல்ல. கொல்லுங்கள்! கொல்லப்படாதீர்கள்!' என்று அறிவுரை கூறினார்.அப்படியல்லவா இருக்க வேண்டும் – போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் மனோநிலை! "உயிரை விட்டார்கள்! ஆஹா! தியாகம்' என்று பத்திரிகைகள் பாராட்ட, அரசியல் தலைவர்கள் புகழாரம் சூட்ட, மக்கள் கொண்டாட, போலீஸ் உயர் அதிகாரிகளும், ராணுவ அதிகாரிகளும் பயங்கரவாதிகளின் குண்டுகளுக்கு இரையாவது விமரிசையாக நடந்து வருகிறது. அதுவும் உயர் அதிகாரிகளே, உயிர் துறக்க நேரிடுகிறபோது, அவர்களின் கீழ் பணியாற்றுகிறவர்களின் மன உறுதி தளராதா? ஏன் இந்த நிலை?"பயிற்சி போதாது; அவர்களிடம் உள்ள ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள், இந்த மாதிரி நிலையைச் சந்திக்கப் போதுமானவை அல்ல' – என்று நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.

இப்படிக் கூறியுள்ளவர்கள் அமெரிக்கர்கள் என்பதால், "இவர்கள் என்ன சொல்வது? கைவசம் இருப்பது தீபாவளித் துப்பாக்கியே ஆனாலும், உயிரைத் துச்சமாக மதிக்கிற வீரர்களாக்கும், எங்கள் ராணுவத்தினரும் போலீஸாரும்!' என்று தேசபக்தி சொட்டச் சொட்டப் பேசி விடுவது சுலபம். உயிரிழக்கப் போவது மேடைப் பேச்சாளர்கள் அல்லவே!சில நேரங்களில், போலீஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் உயிரிழப்புத் தவிர்க்க முடியாததாக இருக்கலாம்; ஆனால் அதுவே அவர்களுடைய கடமை ஆகிவிடக் கூடாது. "உயிரை விடுவதே எங்கள் லட்சியம்' என்றா பாதுகாப்பு வீரர்கள் செயல்பட முடியும்? ஜெனரல் பேட்டன் கூறிய மாதிரி, உயிர்களை எடுக்க வேண்டும்; பகைவர்களைக் கொல்ல வேண்டும்; இயன்றால் உயிருடன் அவர்களைப் பிடித்து, உண்மைகளைக் கறக்க வேண்டும். அதற்கு வேண்டிய பயிற்சிகளையும், ஆயுதங்களையும், நவீன உபகரணங்களையும் அவர்களுக்கு அளிக்க வேண்டும். அதைச் செய்யாமல் இருப்பது அரசு, அவர்களுக்குச் செய்கிற துரோகம்."அயல் நாட்டு உதவியா? தேவையே இல்லை! அதுவும் அமெரிக்காவா! ஐயோ! ஏகாதிபத்திய நாடு! அதனிடம் உதவி பெறுவதா? அவர்கள் பயிற்சி முறையை நாம் பின்பற்றுவதா? கேவலம்! நமது சத்ரபதி சிவாஜி காட்டாத வீரமா? திப்பு சுல்தான் காட்டாத மனோதிடமா?' என்றெல்லாம் பேசுவது, டெலிவிஷன் உரையாடல்களுக்கும், பத்திரிகைகளின் கட்டுரைகளுக்கும் சரிப்பட்டு வரலாம்; ஆனால், வேலைக்கு ஆகாது.

அமெரிக்காவும், இஸ்ரேலும்தான், இன்று தீவிரவாதிகளை எதிர்கொள்வதில் நிபுணத்துவம் வாய்ந்தவை. அந்நாடுகளிலும் பயங்கரவாத நிகழ்ச்சிகள் நடந்துள்ளன; இன்னமும் நடக்கலாம். ஆனால், அவர்கள் வசம் உள்ள உபகரணங்கள்; அவர்கள் பெற்றுள்ள பயிற்சி; வெவ்வேறு வகை தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்கொள்ள அவர்கள் வகுத்துள்ள வழிமுறைகள் – எல்லாமே விசேஷமானவை. அவற்றை நாம் பெற வேண்டும். அந்த இரு நாடுகளுடன் இவ்விஷயத்தில் முழுமையாக ஒத்துழைத்து, அவர்கள் உதவியை நாம் பெற வேண்டும்."பொடாவை மீண்டும் கொண்டு வந்தால் பா.ஜ.க.விடம் பணிந்தது போல் ஆகிவிடும்; அதைவிட தீவிரவாதிகளிடம் பணிந்து போவதே மேல்' என்ற மதச்சார்பின்மை வைராக்கியத்தைக் கைவிட மத்திய காங்கிரஸ் அரசு தயாரில்லை என்றால் – மதச்சார்புத் தீட்டு படிந்துவிட்ட "பொடா'விற்குப் பதிலாக "கொடா, மொடா, தொடா' என்று ஏதாவது ஒரு புதிய பெயரில் பொடா சட்டத்தையே கொண்டு வர வேண்டும். அல்லது இருக்கிற சட்டங்களையே இன்னமும் பலமடங்கு கடுமையாக்க வேண்டும்.தேவைப்படுகிற இடங்களில் திடீர் சோதனையிடும் உரிமை; சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து சிறைப்படுத்துகிற அதிகாரம்; தன்வசமுள்ள தகவலைத் தர மறுக்கிறவர் பத்திரிகையாளரானாலும் சரி, வக்கீல் ஆனாலும் சரி – அவரைக் கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்துகிற ஷரத்துக்கள்; தீவிரவாதிகளுக்கு தங்க இடம் அளித்தவர்கள் நிரபராதிகளாக இருந்தால், அதை அவர்கள்தான் நிரூபிக்க வேண்டுமென்ற கட்டாயம்; போலீஸிடம் அளிக்கிற ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்றத்தில் ஏற்கப்படும் என்கிற பிரிவு; ஜாமீனில் வெளியே வருவதற்கே, கைதானவர் தனது நிரபராதித் தன்மையை நிரூபிக்கிற அவசியம்; தீவிரவாதிகளை ஆதரித்துப் பேசுபவர்களையும், எழுதுபவர்களையும் தண்டிக்கத் தேவையான ஷரத்துக்கள்; தீவிரவாதச் செயலுக்கு என்ன தண்டனையோ, அதே அளவு கடுமையான தண்டனையை, தீவிரவாதச் செயலுக்கு உதவியவர்களுக்கும்நிர்ணயிக்கிற ஷரத்துக்கள்... போன்ற பல அம்சங்களை, இருக்கும் சட்டத்திலேயே புகுத்தலாம்; அல்லது புதிய சட்டம் கொண்டு வரலாம்.

இம்மாதிரிச் செய்வது, "தீவிரவாதத்தைப் பொறுத்த வரையில், அரசு தயை– தாட்சண்யம்; ஓட்டு – பிரச்சாரம்; மனித உரிமை – மண்ணாங்கட்டி... என்பது போன்ற சுமைகளை உதறித் தள்ளிவிட்டது' என்ற தகவல், தீவிரவாதிகளுக்கு அளிக்கப்பட்டாக வேண்டும். இதனால் தீவிரவாதிகள் ஓய்ந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால், அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களும், உதவி செய்பவர்களும் இதனால் பாதிக்கப்பட்டு, தீவிரவாதிகளின் திட்டங்கள் தடங்கல்களை சந்திக்கும்; தகவல்கள் அரசுக்குக் கிட்டுவதற்கான வாய்ப்புகளும் கூடும்.இது தவிர, பங்களாதேஷ் அகதிகள் வருவதும், தடுக்கப்பட வேண்டும்;வந்துவிட்டவர்களும், ஓட்டுரிமை அற்றவர்களாக்கப்பட வேண்டும்;

தொடர்ந்த கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டும். பாகிஸ்தானுடனான எல்லைகள் மிகக் கடுமையாகக் கண்காணிக்கப்பட வேண்டும். தீவிரவாதிகளுக்கு உதவக்கூடிய இந்தியா – பாகிஸ்தான் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட வேண்டும்.உள்துறை அமைச்சர் ராஜினாமா, திருப்பதியில் தலைமுடியைக் காணிக்கையாக செலுத்துகிற மாதிரிதான். போனது மீண்டும் வளர்கிற மாதிரி, பழைய முனைப்பின்மை மீண்டும் வளரும். பாவம் செய்துள்ளோம் என்பதை உணர்கிறோம் என்பதற்கான அடையாளமாக அது ஆகுமே தவிர, பாவத்தை அது முழுமையாகக் கழுவிவிடாது. அதற்கு நம்மிடம் திருந்திய நடத்தை தேவை. அதை மத்திய அரசு காட்ட வேண்டும்.தீவிரவாதிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனை நிறைவேற்றப்படாது; தீவிரவாதச் செயல்களுக்கு நியாயம் கற்பிக்கப்படும்; "கடுமையான சட்டம் தேவை என்று பேசுவதே கண்டனத்திற்குரிய அதீதமான, நிதானமற்ற நடவடிக்கையாகிவிடும்' என்று உளறுவது; தடைசெய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது குற்றமாகாது என்ற நிலையில் சட்டத்தை வைத்திருப்பது; அப்பாவிகள் துன்புறுத்தப்பட்டு விடக்கூடாது என்பதுதான் முக்கியம் என்று கூறிக்கொண்டு, போலீஸாரின் கைகளைக் கட்டிப் போடுவது; என்கௌன்டர் நடந்தால் உடனே போலீஸ்துறை மீது பாய்வது... போன்ற பெட்டைத்தனங்கள் நிற்க வேண்டும்.நடப்பது யுத்தம். யுத்த தர்மம் இதற்குச் செல்லுபடியாகும். எதிரியை வீழ்த்த வேண்டும். அதுதான் இலக்கு. அதுதான் முனைப்பு. "அந்த முனைப்பின் காரணமாகச் சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால், வேறு வழியில்லை என்று அவற்றைச் சகித்துக்கொள்ள வேண்டியதுதான்' என்ற நினைப்பு தோன்ற வேண்டும். தேசம், பட்டது போதும். ( நன்றி: துக்ளக் )

No comments: