Monday, February 17, 2014

பிப்ரவரி 13 உலக வானொலி தினமாம். 90க்கு முன் விவரம் தெரிந்த எவரும் வானொலின் தாக்கத்திலிருந்து தப்பி இருக்க முடியாது. வானொலி என் வாழ்வின் ஒரு பகுதி அன்னாளில்.

காலை 5.55க்கு வந்தேமாதரம் துவங்கி 9.15 மணிக்கு காலை நிகழ்ச்சிகள் கோவை வானொலியில் முடியும் வரை தினசரி ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கும் எங்கள் வீட்டு வால்வு வானொலி. இடை இடையே திருச்சி, சென்னை, பாண்டிச்சேரி, சிலொன் என்று ஒரு சுற்று மினி டூர் சுற்றி வருவோம். ரேடியோ பக்கத்திலேயே 'வானொலி' புத்தகம் இருக்கும். மாதமிருமுறை தவறாது வாங்கி விடுவார் என் அருமை அப்பா. கடைசியாய் நான் பார்த்த இதழ் 75பைசா என்று நினைவு.

 
80களில் radio license புத்தகத்தை எடுத்துச் சென்று ஒரு முறை Annual license fee கூட கட்டியிருக்கிறேன். சிங்க முத்திரை ஸ்டாம்பை ஒட்டி ஒரு முத்திரை அடித்துத் தருவார்கள். வீட்டில் அந்த புத்தகம் இருக்கிறதா என்று தெரியவில்லை. கிடைத்தால் பொக்கிஷமே. ராகம் தேஷ் என்று தெரியாமல் வந்தேமாதரம் மனதில் பதிந்தது ரேடியோவால்தான். தினசரி நிகழ்ச்சி நிரல் பசுமரத்தாணியாய் பதிந்து கிடக்கிறது.

கோவை வானொலின் காலை 5.55 வந்தேமாதரம், டெல்லி ஆங்கில செய்திகள், பக்திப்பாடல்கள், 6.30 கோவையின் தினசரி நிகழ்ச்சிகள், 6.45 மாநிலச் செய்திகள், விவசாய செய்திகள், 7.15 ஆகாஷ் வாணி டெல்லிஅஞ்சல், 7.30 to 8.00 கர்நாடக இசை. திருச்சியில் அதே சமயம் 7.30 to 8 மணி திரை இசை. கர்நாடக சங்கீதம் கோவையில் ஆரமித்தவுடன் எங்கிருந்தாலும் ஒடி வந்து திருச்சி திரை இசைக்கு மாற்ற என் அப்பா, என்டா நன்றாய் பாடிக்கொண்டிருக்கும் வித்வானின் கழுத்தை நெறிக்கிறாய் என்பார்.

பின்னாளில் கர்நாடக இசை பிடித்துப்போக பிடித்ததை எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பிடிவாதத்தால் வயிற்றையும் வாயையும் பற்றி கவலைப்படாமல் மியுசிக் காலேஜில் சேர்ந்ததும் கவலைப்பட்டு விட்டதும் தனிக்கதை.

காலை 8 லிருந்து 8.20 வரை ஹிந்தி செய்தியும் ஆங்கில செய்தியும் டெல்லி அஞ்சலாய். 8.21 லிருந்து 9 மணி வரை திரையிசை கோவை வானொலியில். பின்னாளில் திரையிசை 9.15 வரை நீடிப்பு செய்யப்பட்டது. இப்பொழுதும் இதே நிகழ்ச்சி நிரலா என்று தெரியவில்லை. திரையிசைக்காய் ஸ்டேஷ்சன் ஸ்டேஷனாய் ரேடியொவை திருகியதை நினைத்தால் தேடல் எவ்வளவு சுகம் என்பது புரிகிறது.

NCC Camp கிற்காய் அரைப்பரீச்சை லீவில் அதிசயமாய் 5 மணிக்கு எழுந்திருந்த வேளையில் காலை 5.15க்கு இந்திய இலங்கை அமைதிப்படைக்காக (IPKF) ஒலிபரப்பாகும் செய்தியில் MGR இறந்த செய்தியை அப்பா கேட்டுச் சொன்னது ரேடியோவில் தான். 5.30க்கு பள்ளியில் சொன்ன பொழுது நம்பாமல் ஆறு மணி ஆங்கில செய்தியை Head Post Office அருகில் இருக்கும் டீக்கடையில் கேட்டுவிட்டு வந்தார் NCC வாத்தியார் தமிழ்வாணன். நொடிப் பொழுதில் அமெரிக்காவிற்கும், ஆப்பிரிக்காவிற்கும் செய்தி பறிமாறும் காலகட்டத்தில் 20-25 வருட பின்னோட்டம் வேடிக்கையாய் இனிக்கிறது.

விளம்பரம் இல்லை வியாபாரம் இல்லை. Dec-11 பாரதியின் பிறந்த நாளில் நல்ல பாட்டுக்களை கேட்டோம். இன்று Dec-11 பாரதியை தொலைத்து Dec-12ல் ரஜினியின் பிறந்த நாள் கூத்துக்களை பார்க்கிறோம். இடையூறுயில்லா, இடையறா சுகத்திற்க்காய் நொடிக்கொரு மாறுதலுடன் ஓடிக்கொண்டிருக்கும் கால வெள்ளத்தில் 'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவில கால வகையினானே' என்ற நன்னூல் புறனடையே மாறாதிருக்கும்.

அது சரி.. Feb-13 பேசியாகிவிட்டது....Feb-14..அதைப்பற்றி எழுத என்ன இருக்கிறது...தினம் தினம் காதலிப்பவர்க்கு தனியொரு தினம் எதற்கு? சட்டென ஞாபகம் வருவது கோவையில் நடந்த கலவரம்...காவலர் செல்வராஜ் என்பவர் கொல்லப்பட்டதால் (பெயர் சரிதான்..என் ஞாபக சக்தி சரியாய் இருந்தால்)...பின்.பின்...வாழ்வில் வாங்கிய முதல் முத்தம் (அம்மா தான்)... நான் 'வழங்கிய' என்று எழுதவில்லையே...அப்பாடா...தப்பித்தேன்...

1 comment:

Rocking Chair said...

At last got some time to spend on your hobby it seems. Looking for more in the future.