Friday, February 7, 2014

தனிமை.... ஊரையும் உறவையும் விட்டு ஓடி வந்துவிட்டாலும் அயர்ச்சியும் ஆயாசமுமாய் ஒதுங்கி நிற்கும் போதுதான் தனிமையின் சுமை அதிகமாய் உணரப்படுகிறது. உள்ளுரிலேயே உறவுகளுடன் இருந்தபோதிலும் 90களில் தனிமையின் சுமையால் பொதிமாடாய் ஊரெங்கும் சுற்றித்திரிந்து இருக்கிறேன். தனிமையை விரட்டுவதாய் நினைத்து சைக்கிளை விரட்டியதே அதிகம்.

தனிமை எப்பொழுதுமே சுகமான சுமைதான். ஒடிக்கொண்டிருக்கும் ஒட்டத்தைப்பற்றியும் தூரத்துப் புள்ளியாய் தெரியும் கனவுகளைப்பற்றியும் கவலைப்படாமல் களித்திருப்பது தனிமையில்தான். கண்ட கனவுகள் கானல் நீராய் போனதும், காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி களித்த நாட்கள் கணப்பொழுதில் மறைந்து போனதும், ஓட்டி உறவாடிய நண்பர்களும் உறவுகளும் உதிர்ந்து போனதும் நினைவில் வர கழிவிரக்கமே மிஞ்சும் தனிமையில்.

தனிமை சூழும்பொழுதெல்லாம் எட்டி எட்டி உதைத்து உற்சாகமாய் வெளிவரவே நான் முயல்கிறேன். பல சமயம் மெல்ல அசை போட்டுப் பார்க்க பழைய நினைவு சுகம் சுழலாய் உள்ளே இழுத்துவிடுகிறது. நினைவுச்சுகம் ஒரு லாகிரி வஸ்து.
என்னை அது விரட்ட,  நான் அதை விரட்ட முயல்கிறேன் இந்த Blog post மூலமாய்...ஜெயிப்பது எப்பொழுதுமே தனிமைதான்

1 comment:

பட்டி வீரன் பட்டிக்காரன் said...

மிகவும் அருமை, ஹரி. பகிர்ந்ததற்கு நன்றி.
எனது முப்பாட்டனார் திரு.தனுஷ்கோடி அவர்கள் அந்தக் காலத்தில் தனக்கு சொந்தமான மலைக்காட்டில், ஒரு பகுதியை விற்று வாங்கிய வானொலி எங்கள் வீட்டில் இருந்ததுண்டு!
சரோஜ் நாராயணசாமி அவர்களின் குரலில் செய்தி, தென்கட்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் குரலில் 'இன்று ஒரு தகவலில்' வரும் கதை, அப்துல் ஹமீது அவர்களின் குரலில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..... எல்லாம் மறக்க முடியாதவை.
அனைத்தையும் நினைவுக்கு கொண்டு வந்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.

சுஜாதாவின் பேட்டி ஒன்றில் வானொலியின் சக்தி & அதன் வீச்சையும் பற்றி படித்த ஞாபகம். அதில் அவர் குறிப்பிட்டிருந்தது போலவே, (அலைவரிசை வாயிலாக) வானொலி மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது அனைவரும் அறிந்த உண்மை.