இதில் வருபவர்கள் காலம் கடந்தவர்களாகவும், சம காலத்தில் ஏதோ ஒரு வகையில் என்னை யோசிக்க வைத்த மனிதர்களாகவும் இருக்கலாம். நல்லவைகளாகவும், அல்லாதவைகளாகவும் இருக்கலாம். எண்ணமே எழுத்து. நல்லவைகளாய் தோன்றுபவை அல்லாதவைகளாகவும், அல்லாதவைகளாய் தோன்றுபவை நல்லவைகளாகவும், கிடைத்த கிடைக்கப்பெறும் அனுபவங்களால் அன்றாடம் மாறிக்கொண்டிருக்கும் முடிவில்லா நிகழ்வுகள்.
இன்டர்நெட் யுகத்தில் எதை வேண்டுமாலும் படிக்கலாம், என்ன வேண்டுமாலும் என்றாகி விட்ட நிலையில் கூடிய மட்டும் மனோதர்ம விரோதமில்லாமல், நாம் எழுதுவதை யார் படிப்பார்கள் என்ற பிரக்ஞை இல்லாமல் படித்தவற்றை பகிர்தல் நலம் என்பதாய் எனது எண்ணம்.
நிகொலோ டெஸ்லா - தோற்றம்-மறைவு 10 ஜீலை 1856 முதல் 7 ஜனவரி 1943 வரை. ஏறத்தாழ 86 ஆண்டுகளான நீண்ட வாழ்க்கை. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது மாதிரியான, ஆராய்ச்சிகளுக்கான அர்ப்பணிப்பு வாழ்க்கை. ஆஸ்ட்ரியா குடிமகனாய் பிறந்து, ஹங்கெரி, ப்ரான்ஸ் என்று வாழ்ந்து அமெரிக்க குடிமகனாய் வாழ்க்கையை முடித்தவர். மார்கோனிக்கு முன்பே wireless communication என்பதை நிருபித்து காட்டியவர். உலகின் மிக முக்கியமான AC polyphase transmission and AC motor என்பதை 1888 லேயே கண்டறிந்தவர். பணத்தின் மீது பற்றற்றவராய் இருந்ததாலும், பல துறைகளில் நாட்டமுடயவராய் இருந்ததாலும் பலரால் பைத்தியகாரப்பட்டம் சூட்டப்பட்டு அங்கீகரிக்கப்படாத ஆராய்ச்சியாளராய் வாழ்க்கையை முடித்துக்கொண்டவர்.
பணத்தேவைக்காய் எடிசனிடம் (தாமஸ் ஆல்வா எடிசன்) வேலை செய்த கால கட்டத்தில் இவருடைய பல வேலைகள் எடிசனால் உறிஞ்சப்பட்டு அவைகள் எடிசனுடைய கண்டுபிடிப்பகள் ஆக்கப்பட்டன. ஆனாலும் AC motor என்பது தப்பி பிழைத்து, இவர் பெயரிலேயே காப்புரிமை பெற்றது.
மறைந்தபின் அவருடைய கண்டுபிடிப்புகளின் அருமைகளையும், அதனால் ஏற்படும் விளைவுகளும் நினைத்த அமெரிக்க அரசாங்கம் ரகசியமாய் அவருடைய பல வருட உழைப்பை வாரிச் சுருட்டிக் கொண்டுவிட்டது. மின் காந்த கதிர்கள் மூலம் ஒரு குறிப்பிட்ட இடத்தையும் பொருள்களையும் பேரழிவுக்கு உட்படுத்த முடியும் என்பதான இவருடைய கண்டுபிடிப்புக்களும், UFO (Unidentified fying objects) என்பதான இவருடைய சித்தாங்களையும் இன்றும் FBI பரம ரகசியமாய் பாதுகாத்து வருகிறது.
இந்துமத இயற்பியல் சித்தாந்தங்களாலும், சுவாமி விவேகானந்தரின் விளக்க உரைகளினாலும் கவரப்பட்டு சைவ உணவு முதல் பல வகைகளிலும் தன் பழக்க வழக்கங்களை தன்னுடைய இறுதிக்காலங்களில் மாற்றிக்கொண்டவர்.
மறக்கப்பட்ட, மறைக்கப்பட்டமாமேதை என்பதாய் இன்றும் ஆராய்ச்சியாளர்களாலும், இயற்பியல் மேதைகளாலும் நினைவு படுத்தப்படுபவர். பலராலும் அறியப்பட, கவரப்பட புத்திசாலித்தனமும், நல்ல குணங்களும், சாதனைகளும் மட்டும் போதுமானவை அல்ல, சுய விளம்பரமும் , அதற்க்கு அப்பாற்ப்பட்ட ஏதோ ஓன்றும் தேவை என்பதை உணர்த்தும் வாழ்க்கை வாழ்ந்தவர்.
மேற்சொன்னவற்றை படித்தபின் Nicolas Tesla என்று நீங்கள் Google ல், Bing ல் நீங்கள் தேடினீர்கள் என்றால் நான் எழுதியதும் உங்களை யோசிக்க வைத்திருக்கிறது என்பதாய் அர்த்தம்...ஹா!..ஹா!..ஹா!