தாய் மண்ணே வணக்கம் என்று வணக்கம் போடாதது ஒன்றுதான் குறை. சென்னை வெயிலிருந்து தப்பி வந்து முன்று வாரம் ஓடியேவிட்டது. இன்றும் வெயில் வராதா என்று ஆயாசமும், தவிப்பும் வந்த ஒரிரு நாட்களிலேயே வந்துவிட்டது இங்கு. எதுதான் வேண்டும்? எதில்தான் திருப்தி அடையும் மனம்?
ஆச்சரியமாய் இருக்கிறது. ஊருக்கு போகப்போகிறோம் என்ற மன மகிழ்ச்சியும், குறுக்குறுப்பும், தவிப்பும் வரவே இல்லை எனக்கு. நண்பர்கள், உறவுகள் ஒட்டுதல்கள் மெலிதாகிப்போனது காரணமாய் இருக்கலாம். நேரமின்மையும் ஒரு காரணமாய் இருக்கலாம். கிடைத்த எட்டு நாட்களில் பயணமே இரண்டு நாட்களை விழுங்கிவிட்டது. சில நாட்களுக்கு முன் Ballistic missile defence system என்பது பற்றி படிக்க நேர்ந்தது. விடுக்கப்பட்ட எவுகணை, தோட்டாவை அதைக்காட்டிலும் வேகமாய் சென்று அழிக்கும் முறை. அந்த மாதிரி பயணிகள் வேகமாய் செல்ல ஏதேனும் சௌகரியங்கள் வரும் காலத்தில் வரலாம்.
முன்பெல்லாம் சென்னையிலிருந்து கோவை செல்ல டிக்கெட் வாங்கிவிட்டு, நாள் நெருங்க நெருங்க தவிப்பாய் தவிப்பேன். டிக்கெட் இல்லாமல் unreserved ல் வியர்த்து ஒழுகி, அடிதடி போட்டு, தூக்கம் தொலைத்து, அழுக்காக வீடு போய் சேர, எப்போதடா வார இறுதி நாள் வரும் என்று நாயாய் காத்துக்கிடப்பேன். கிளம்பும் முன், பார்ப்பவர் எல்லோரிடமும், ஊருக்கு போகிறேன் ஊருக்கு போகிறேன் என்று சொல்லுவேன். கோயமுத்தூர் போறத்துக்கு ஏதோ அமெரிக்கா போறாமாதிரி சொல்லிட்டு திரியரான் என்று நண்பர்கள் கிண்டல் அடிப்பார்கள். களிப்பாய் களித்த கடந்த நாட்கள் எல்லாம் கோவையில்தான் என்பதான ஊர் பாசம். உண்மை என்னவென்றால், மனித மனம் எப்பொழுதும் கடந்த காலத்தை, நிகழ் காலத்தை விட இனிமையானதாகவே நினைக்கிறது. அப்பொழுதும், அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லல் பட்டுக்கொண்டிருந்தோம் என்பதுதான் உண்மை.
ஒன்று மட்டும் நிதர்சனம். தெருத்தெருவாய் சுற்றித்திரிந்து, பட்டமும், பம்பரமும், கிடைத்த சந்தில் கிரிக்கெட்டுமாய் நான் (நாம்?) கழித்த காலங்கள் கண்டிப்பாய் என் மகனுக்கு, கிடைக்காது. உலகை வெளியே தேடிய காலம் போய், அறைக்குள் உலகை அழைக்கும் காலத்தில் அவர்கள் இருக்கிறார்கள். உறவுகள் சூழ்ந்த வாழ்க்கை என்பது ஓடியே போய் உறவுகள். புருஷன், பெண்டாட்டி, பிள்ளையாய் சுருங்கிவிட்டது. இது பாட்டிடா, இது தாத்தாடா, என்று அறிமுகப்படுத்துவதை என்னவென்று சொல்ல? Hi...hi...bye..bye உறவுகள். கண்ணாயில் விழுந்த கீறலாய் நீ சௌக்கியமா? நான் சௌக்கியம் என்பதாய் முடிந்து விட்டது. பல சமயங்களில் நான் சௌக்கியம் என்பதை கூட முழுமையாய் வெளிப்படுத்த முடிவதில்லை.
அசட்டு ஆங்கில வார்த்தைகள், computer game, You tube ல் படங்கள் என்று விளையாடும் என் இரண்டரை வயது மகனின் செய்கைகளை பார்த்து பெருமைப்பட என்ன இருக்கிறது? அவன் இழந்த நம் காலங்களை நினைத்து மனச்சுமையுடன் இந்த தகப்பனால். பின்னாளில் நிச்சயமாய் அவனால் ஈன்ற பொழுதினினும் பெரிதுவக்கலாம். சுற்றி விளையாடிய காலம் போய் நாலு சுவற்றுக்குள் விளையாடும் காலம். காலம்...காலம்...காலம்தான் கடவுள்